Tamil News
Tamil News
Tuesday, 22 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் விடுவிக்கப்பட்ட கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக தூங்கவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.  

சொத்துக்குவிப்பு வழக்கு

கடந்த 2006 முதல் 2011 திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் மீது வழக்கு தொடரப்பட்டது. லஞ்சஒழிப்புத்துறை பதிவு செய்த இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அமைச்சர்கள். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அவர்களது உறவினர்களையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கின் விசாரணைக்கு எடுத்திருக்கிறார். 

முதலில் பதில் சொல்லுங்கள் பிறகு வாதத்தை முன்வையுங்கள்

அதன்படி இந்த வழக்கு முதன்முறையாக விசாரணைக்கு வந்தபோத, அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, தாமாக முன்வந்து வழக்கின் விசாரணைக்கு எடுப்பதற்கு முன்பாக உச்சநீதிமன்ற உத்தரவுகளை முன்வைக்கிறோம் அதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிப்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் பிறகு வாதத்தை முன்வையுங்கள் என்று திட்டவட்டமாக நீதிபதி தெரிவித்தார். 

3 நாட்களாக தூங்கவில்லை

இந்த வழக்கில் அமைச்சர்களை விடுவித்து பிறப்பித்த உத்தரவில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி இருக்கிறார்கள் என்றும், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் மீதான வழக்குகளில் பின்பற்றப்பட்ட நடைமுறை தவறானது என்றும், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக தூங்கவில்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்தார். மேலும், தீர்ப்புக்கு ஒரு வடிவத்தை வைத்துக்கொண்டு தேதியை மட்டும் மாற்றி தீர்ப்பு கூறியது தெரிகிறது. நான் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் கடமையில் இருந்து தவறியதாகிவிடும் என்றும் தெரிவித்தார். 

 குப்பனுக்கும் சுப்பனுக்கும் தான் நீதிமன்றம்

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்படும்விதம் அதிர்ச்சியளிக்கிறது என்றும், யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப்போக செய்கின்றனர் என்ற ஒரு விமர்சனத்தையும் முன்வைத்தார். நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாலேயே தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தாதகவும், நீதிமன்றம் என்பது குறிப்பிட்ட கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானதல்ல, நீதிமன்றங்கள் சாதாரன குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரித்தானது என்ற ஒரு வலுவான கருத்தையும் முன்வைத்திருக்கிறார். 

ஒத்திவைப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் 2021-ம் ஆண்டுக்கு பிறகு யூடர்ன் அடித்து தங்களின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். ஆட்சியாளர்களுக்கு தகுந்தாற்போல அதிகாரிகள் மாறுகிறார்கள். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.