Tamil News
Tamil News
Wednesday, 23 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனுதாக்கல் செய்ததையடுத்து, தமிழக அரசின் மனுவை நிராகரிக்க வேண்டும் என கர்நடகா அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 

உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இதையடுத்து, காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடாத நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதைத்தவிர, வேறு வழியில்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அதில், ஆகஸ்டு மாதத்துக்கான எஞ்சியுள்ள நாள்களுக்குத் தேவையான 24 ஆயிரம் கனஅடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல செம்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதிசெய்ய வேண்டும். எஞ்சியிருக்கும் காலத்துக்கு தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதிசெய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

நாளை விசாரணை

அதன்படி, காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கின்றனர். 

கர்நடகா அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் கர்நாடக அரசின் சார்பில் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாடு அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியது இல்லை என்றும், காவிரியில் இருந்து திறக்கப்பட்ட நீரை தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் கர்நாடக அரசு அமல்படுத்தி வருகிறது. மேகதாது அணை கட்டி இருந்தால் நீர் தட்டுப்பாடு வந்து இருக்காது. ஆகையால், தமிழக அரசின் மனுவை நிராகரிக்க வேண்டும் என பிரமாண பத்திரத்தில் கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது.