Tamil News
Tamil News
Tuesday, 29 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பான வழக்கு

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவன் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே நீதிமன்றம் அறிவுறுத்தியபடி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் சிறப்பு பணி அதிகாரியும் நீட்திமன்றத்தில் இன்று ஆஜராகி இருந்தனர். 

அதிகாரிகள் தரப்பு வாதம்

அப்போது, மாநிலம் முழுவதும் 30,473 கோயில்களில், அறங்காவலர்கள் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 4,303 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 3,187 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், 38 மாவட்டங்களிலும் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்பட்டது குறித்த விவரங்கள், நாளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவிக்க முடியும்

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். மாவட்ட குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெரிய அளவில் பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர், அவர்கள் அரசியல் கட்சி சார்புடன் உள்ளனர் என்ற புகாரை தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட குழுக்கள் நியமனம் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறித்த விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்தால், பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவிக்க முடியும் என்றும் உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்தனர். 

பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தினால் தகுதி நீக்கம்

மேலும், கோயில் அறங்காவலர்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றும், பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தினால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதியாக, தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டுமென்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.