Tamil News
Tamil News
Tuesday, 05 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதிக்கு தக்க பதிலடி தர வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.  

சனாதன ஒழிப்பு மாநாடு

கடந்த ஆக-02-ம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தலைமையில் சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விசிக தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் மதுக்கூர் ராமலிங்கம், கே.பாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உள்ளிட்டோர் பங்கேற்று பேசியிருந்தனர். இவர்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் தான் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. 

ஒழித்துக் கட்ட வேண்டும்

அந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும். சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார். இந்த விஷயம் தான் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

உதயநிதிக்கு தக்க பதிலடி தர வேண்டும்

இந்தநிலையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு தக்க பதிலடி தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், "எந்த மதத்தையும் தவறாக பேசக்கூடாது. சனாதன தர்மத்தை யாரேனும் தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். மேலும், இந்தியா - பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களே பதில் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய அரசியலில் பேசுபொருளான திமுக

கடந்த சில நாட்களாகவே தேசிய அரசியலில் அடுத்தடுத்து பேசுபொருளாக மாறி வருகிறது திமுக. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் திமுக முக்கிய இடம் வகிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால், பாஜகவினர் தொடர்ந்து எங்கு சென்றாலும் திமுகவை விமர்சனம் செய்து வந்தனர். இந்தநிலையில், பிரதமரே திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி தர வேண்டும் என பாஜக அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.