Tamil News
Tamil News
Wednesday, 06 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த அரசியல்வாதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருக்கிறது. 

திமுக வட்டச்செயலாளர்

சென்னை தியாகராய நகரில் 64 வயதான கிரிஜா என்பவரது வீட்டில் திமுக வட்டச்செயலாளர் ராமலிங்கம் என்பவர் நீண்டகாலமாக வாடகை தராமல் வசித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2017-ம் ஆண்டு முதல் வாடகை தராததால் வீட்டை காலி செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.   

வீட்டை விட்டு காலி செய்ய உத்தரவு

உத்தரவிட்டபோதிலும், வீட்டை காலி செய்யாமல் வசித்து வந்ததால், ராமலிங்கத்திற்கு எதிராக கிரிஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வட்டச் செயலாளரை வெளியேற்றி அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகர ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார். 

பாக்கி இன்னும் தரவில்லை

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ராமலிங்கம் வீட்டை காலி செய்து விட்டதாகவும், வீடு தற்போது உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இதை ஒப்புக்கொண்ட கிரிஜா தரப்பில், வாடகை பாக்கி இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அரசியல்வாதிகளுக்கு அறிவுரை

அரசியல்வாதிகளின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர்கள்  பொதுமக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் அவர்களை நல்வழியில் நடத்த வேண்டுமென தெரிவித்த நீதிபதி, அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தின் மூலம் பொதுமக்களை மிரட்டுவதையும் அவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்காது  என்றும், அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, சுயநலனுக்காக பிரச்னைகளை உருவாக்க பயன்படுத்தக் கூடாது என்றும் அர்சியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்கி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.