Tamil News
Tamil News
Sunday, 10 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

சனாதன சர்ச்சை - உதயநிதி அறிக்கை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி கடந்த ஆக-2ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியிருந்தார். அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இந்தியா முழுவதிலும் வழக்குகள் போடப்பட்டது. இந்த விவகாரத்தில் சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டில் தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே என்று குறிப்பிட்டு, கொடநாடு விவகாரத்தையும் கூட்டணியில் இருக்கும் பாஜகவையும் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.  

எடப்பாடி அவர்களே

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது; "‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ‘என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்.

ஊர்ந்து போக ஃபர்னிச்சர் கிடைக்காதா?

நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன. இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இபிஎஸ் வழக்கு

இதனடிப்படையில்தான், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாகவும், தன்னைப் பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.