Tamil News
Tamil News
Monday, 11 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

சனாதனத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து பேசுவதற்கு ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தான் காரணம் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். 

சனாதன சர்ச்சை - பாஜக தலைவர்கள் கண்டனம்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து தான் இன்று வரையிலும் இந்தியா முழுமைக்கும் பேசுபொருளாகியிருக்கிறது. சனாதனம் பற்றியான விவாதம் நாளுக்கு நாள் பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, சனாதனம் பற்றி பேசியவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து பாஜக தலைவர்கள் உதயநிதி பேசியதற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம்

அதேபோல், உதயநிதி தலைக்கு சாமியார் ஒருவர் விலை வைப்பது, சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என மத்திய அமைச்சர் மிரட்டல் விடுவது என அடுத்தடுத்து உதயநிதிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, சனாதனத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து பேசுவதற்கு ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தான் காரணம் என்ற ஒரு குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.  

சோனியாவும், ராகுலும் தான் காரணம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், "சனாதனத்திற்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து பேசி வருவது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தான் காரணம். இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து உதயநிதி சனாதனம் குறித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சனாதனத்திற்கு எதிராகவும், உதயநிதிக்கு ஆதரவாகவும் பேசுகிறார். 

பிரித்தாளும் சூழ்ச்சி

இந்திய அரசியல் சாசனம் எந்தவொரு மதத்தைப் பற்றிய ஆட்சேபனைக்குரிய கருத்துக்களையும் அனுமதிக்கவில்லை. இந்த விவரம் கூட இந்தியா கூட்டணியில் இருப்பவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தே இதை செய்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது. இப்பொழுது இந்தியா கூட்டணியுடன் சேர்ந்து வெறுப்பை விதைத்து வருகிறார்கள். அதை மறைப்பதற்கு அன்பு போன்ற விஷயத்தை பேசி வருகிறார்கள். மேலும், பிரித்தாளும் சூழ்ச்சியை இந்தியா கூட்டணியினர் கையில் எடுத்திருக்கிறார்கள்" என்ற ஒரு கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்திருக்கிறார்.