Tamil News
Tamil News
Tuesday, 12 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டபடி விநாடிக்கு 5000 கன அடி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறக்காததால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. 

காவிரி ஒழுங்காற்று கூட்டம்

காவிரி ஒழுங்காற்று கூட்டம் நேற்று செப்-12 டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசும் கர்நாடகா அரசும் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி இன்று வரை 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டையும் இன்னும் சில கர்நாடக அரசுக்கு எதிரான அதிருப்தியை தமிழ்நாடு அரசு முன்வைத்தது. 

தமிழகம் தேவையற்ற தொல்லை கொடுக்கிறது

இதையடுத்து, கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். "ஆகஸ்ட் இறுதி வரை 86 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும், ஆனால் நாங்கள் பாதி அளவு கூட தரவில்லை. தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தை அணுகினாலும், அவர்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை கொடுக்கிறது. மேகதாது திட்டத்தை எதிர்க்க தமிழகத்திற்கு எந்த காரணமும் இல்லை. எங்கள் பகுதியில் நாங்கள் அணை கட்டுகிறோம், ஆனால் மத்திய அரசும் தாமதம் செய்கிறது" என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

5000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரை

இதையடுத்து, அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 5000 கன அடி நீரை கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

உத்தரவிட்டபடி திறக்கவில்லை

ஆனால், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டபடி விநாடிக்கு 5000 கன அடி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறக்கவில்லை. விநாடிக்கு 5000 கன அடி திறக்கவேண்டிய நிலையில் 2,784 கன அடி நீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. உத்தரவிட்ட நீரை திறக்க முடியாது என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பேட்டி அளித்திருக்கிறார். இந்தநிலையில், உரிய நீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்திருக்கிறார்.  

கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடாததால் தமிழகத்திலுள்ள மேட்டூர் அணையில் மொத்த நீர்மட்டமான 120 அடியில் 44 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 44 அடியாக குறைந்ததால் சுரங்க மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 6500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.