Tamil News
Tamil News
Wednesday, 13 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

சனாதனத்தை ஒழிக்க இந்தியா கூட்டணிக்கட்சிகள் முயற்சித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி மத்தியப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். 

உதயநிதி பேச்சால் சர்ச்சை

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து தான் இன்று வரையிலும் இந்தியா முழுமைக்கும் பேசுபொருளாகியிருக்கிறது. சனாதனம் பற்றியான விவாதம் நாளுக்கு நாள் பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, சனாதனம் பற்றி பேசியவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து பாஜக தலைவர்கள் உதயநிதி பேசியதற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக உயர்மட்ட தலைவர்கள் கண்டனம்

அதேபோல், உதயநிதி தலைக்கு சாமியார் ஒருவர் விலை வைப்பது, சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என மத்திய அமைச்சர் மிரட்டல் விடுவது என அடுத்தடுத்து உதயநிதிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, சனாதனத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து பேசுவதற்கு ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தான் காரணம் என்ற ஒரு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். 

பிரதமர் பேச்சு

இந்தநிலையில், சனாதன சர்ச்சை தொடர்பாக பிரதமர் மோடி முதன்முறையாக பேசியிருக்கிறார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சனாதன சர்ச்சை தொடர்பாக பிரதமர் பேசியிருக்கிறார். அதில், சனாதனத்தை ஒழிக்க இந்தியா கூட்டணிக்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.  சனாதனம் மீதான தாக்குதல், நாட்டின் கலாச்சாரம் மீதான தாக்குதல் என குறிப்பிட்ட பிரதமர், சனாதனத்தை எவ்வளவு தாக்கிப் பேசினாலும் அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று பேசினார். மேலும், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறுகிறார்கள். எனவே, சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பேசியிருக்கிறார்.