Tamil News
Tamil News
Wednesday, 20 Sep 2023 00:00 am
Tamil News

Tamil News

அதிமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் மோதல்போக்கு ஏற்பட்டு வந்தநிலையில், பாஜகவைப் பற்றி பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது என நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறது. 

முதல் சண்டை

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜக கட்சிகளுக்கிடையே பனிப்போர் நிலவி வருகிறது. முன்னதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பியதாக அண்ணாமலை மீது அதிமுகவினர் கொந்தளித்தனர். அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் போடும் அளவிற்கு விவகாரம் விஷ்வரூபம் எடுத்தது. 

சமாதனம்

அதையடுத்து, தேசிய தலைமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், அண்ணாமலையும் டெல்லிக்கு அழைத்து சமாதனம் செய்தது. அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி எனக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்தவித கருத்து மோதலும் இல்லை என பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தெரிவித்தார். அதன்பிறகு, அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் எந்தவித கருத்து மோதலும் இல்லாமல் சுமூகமாக சென்றது. 

அதிமுக பாஜக கூட்டணி முறிவு

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பற்றி தவறான கருத்தை அண்ணாமலை பேசியதாக அதிமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மீண்டும் பனிப்போர் ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாக, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இது கட்சி தலைமையின் உத்தரவு என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். 

பாஜகவைப் பற்றி பேசாதீங்க

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் அறிவிப்பைத்தொடர்ந்து,  பாஜகவினர் இனிப்பு வழங்கியும், அதிமுகவினர் "நன்றி திரும்பி வந்துவிடாதீர்கள்" என்றும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்தநிலையில், திடீர் பல்டியாக கூட்டணி நிலைப்பாட்டை அதிமுக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் வேறு யாரும் கருத்து தெரிவிக்காதீர்கள் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறது. 

கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது.  பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளின் விமர்சனங்கள் குழப்பத்தை உருவாக்கும். பாஜகவுக்கு எதிராகவோ, கூட்டணி குறித்தோ போஸ்டர் ஒட்டுவது, சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும் நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.