Tamil News
Tamil News
Tuesday, 19 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு மீதான வழக்கு

கடந்த 2006 முதல் 2011 திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் மீது வழக்கு தொடரப்பட்டது. லஞ்சஒழிப்புத்துறை பதிவு செய்த இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அமைச்சர்கள். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அவர்களது உறவினர்களையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கின் விசாரணைக்கு எடுத்திருந்தார். 

3 நாட்களாக தூங்கவில்லை

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆக-23-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அமைச்சர்களை விடுவித்து பிறப்பித்த உத்தரவில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி இருக்கிறார்கள் என்றும், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் மீதான வழக்குகளில் பின்பற்றப்பட்ட நடைமுறை தவறானது என்றும், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக தூங்கவில்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்தார். மேலும், தீர்ப்புக்கு ஒரு வடிவத்தை வைத்துக்கொண்டு தேதியை மட்டும் மாற்றி தீர்ப்பு கூறியது தெரிகிறது. நான் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் கடமையில் இருந்து தவறியதாகிவிடும் என்றும் தெரிவித்தார். 

ஒத்திவைப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் 2021-ம் ஆண்டுக்கு பிறகு யூடர்ன் அடித்து தங்களின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். ஆட்சியாளர்களுக்கு தகுந்தாற்போல அதிகாரிகள் மாறுகிறார்கள். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

நீதிபதி விலக வேண்டும்

அதனடிப்படையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (செப்-20) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது. அப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சட்டவிரோதம் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுவதாக தெரிவித்து, வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி விலக வேண்டுமென கோரினார்.

தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும்

அடுத்தபடியாக, தங்கம் தென்னரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் ஆஜராகி, நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரக்கூடிய ஒரு விசயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

விலகப்போவதில்லை

இரு தரப்பு வதங்களையும் கேட்ட நீதிபதி, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் விசாரணையிலிருந்து விலகப்போவதில்லை என்றும், தலைமை நீதிபதியின் அனுமதி பெற்ற பிறகே தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார். அதன்பின்னர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கும், தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9-ம் தேதிக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.