Tamil News
Tamil News
Monday, 25 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

என்டிஏ கூட்டணியிலிருந்தும் பாஜகவிலிருந்தும் விலகுவதாக நேற்றைய தினம் அதிமுக அறிவித்ததையடுத்து, அதிமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைய வாய்ப்பிருப்பதாக செய்திகள் உலா வந்தது. இந்தநிலையில், விடுதலைச்சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல என்றும் காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

பாஜகவை எதிர்க்க தலைவர் யாரும் இருக்கிறார்களா?

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில்; "திமுக தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் திருமாவளவன்  அவர்கள் களமாடுகிறாரோ அப்படித்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர் அவர்கள்.

இதற்காகத்தான் திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்

திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் விடுதலைச்சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது. கடந்த 2021 ல் நடைப்பெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்ட போதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்.

ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்

ஆகவே,திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே. இச்சூழலில்,பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று நேற்று திரு. எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன், விடுதலைச்சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் எனவும் வரப்போகிறது எனவும் கக்கத்தில் பையை வைத்துக்கொண்டு ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்.

அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது உறுதி

பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும். அந்த வகையில், அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது. விடுதலைச்சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல; காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த கற்பாறையில் அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது உறுதி!" என்று குறிப்பிட்டுள்ளார்.