Tamil News
Tamil News
Monday, 02 Oct 2023 12:30 pm
Tamil News

Tamil News

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்றைய தினம் அக்-02 காந்தி ஜெயந்தி அன்று சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை வெளியிட்டார். இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதை முதன்முதலாக நிகழ்த்திக்காட்டிய பெருமையை பெற்றார் நிதிஷ்குமார். பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடி பேர். 

நேற்று வெளியான சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவில் மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் (MBC) - 36.01 சதவிகிதமும், பிற்ப்படுத்தப்பட்டோர் (BC) - 27.13 சதவிகிதமும், பட்டியல் சாதி (SC) - 19.65 சதவிகிதமும், இடஒதுக்கீடு இல்லாத பொதுப்பிரிவினர் (General) - 15.52 சதவிகிதமும், பழங்குடியினர் (ST) - 1.68 சதவிகிதமும் இருப்பதாக முடிவில் தெரியவந்துள்ளது.    

அதுமட்டுமல்லாமல், அம்மாநில மக்களின் மதத்தின் அடிப்படையில் யார் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதனடிப்படையில், பீகார் மாநிலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை சுமார் 82 சதவிகிதம் இருப்பதாக முடிவில் தெரியவந்திருக்கிறது.   
அதேசமயம், முஸ்லிம்கள் - 17.7%, கிறிஸ்தவர் - 0.05%, பௌத்தர்கள் - 0.08%, சீக்கியர்கள் - 0.01% இருப்பதாக முடிவில் தெரியவந்துள்ளது.   

அதேபோல், பிராமணர் மக்கள் தொகை - 3.65%, ராஜபுத்திரர் மக்கள் தொகை - 3.45%, பூமிஹார் மக்கள் தொகை - 2.86% இருப்பதாக சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவில் தெரிய வந்திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியானதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒருசில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதாவது, சாதிகள் பற்றிய விவரங்கள் மட்டுமின்றி, எல்லா சமூகத்தினரின் பொருளாதார நிலை தொடர்பான விவரங்களையும் நமக்குத் தருகிறது என்றும், தரவுகளின் அடிப்படையில் அந்தந்த சமூகங்களின் முன்னேற்றத்திற்க்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க முடியும் என்று நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.    

அதைத்தொடர்ந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிவை வெளியிட்டதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி X தள பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில், “பிகாரில் OBC + SC + ST 84% என்று சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. மத்திய அரசின் 90 செயலாளர்களில், 3 பேர் மட்டுமே OBC வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்தியாவின் பட்ஜெட்டில் 5% மட்டுமே கையாளுகின்றனர். எனவே, இந்தியாவின் சாதிப் புள்ளி விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். அதிக மக்கள் தொகை, அதிக உரிமைகள், இது எங்கள் உறுதிமொழி,” என்று பதிவிட்டிருந்தார்.               

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டாம் என்பது அரசின் கொள்கை முடிவு. அது குழப்பத்தை ஏற்படுத்தும். நேர்த்தியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க முடியாது என்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது பாஜக அரசு. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள் என்று சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி பேசியிருந்தார். 

சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நடத்தி முடிவை வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் நிதிஷ்குமாரை குறிப்பிட்டு தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தை ஆளும் திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். அதற்கான சிறந்தவழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான்.எனவே, இனியும் தயங்காமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை வரும் 9-ம் தேதி தொடங்க விருக்கும் சட்டப்பேரவையின் துணை நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல், விசிகவின் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.