Tamil News
Tamil News
Friday, 13 Oct 2023 12:30 pm
Tamil News

Tamil News

மகளிர் உரிமை மாநாடு

திமுக சார்பில் நடத்தப்படும் மகளிர் உரிமை மாநாடு இன்று (அக்-14) சென்னையிலுள்ள நந்தனம் YMCA மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முக்தி, சுப்ரியா சூலே, உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இன்று காலையிலேயே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகள் பிரியங்கா காந்தி சென்னை வந்தடைந்தனர்.

சென்னை வந்தடைந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனையடுத்து, அவர்கள் கிண்டியிலுள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகளை தயார் செய்து வைத்திருந்தார் எம்.பி. கனிமொழி. 

தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் வளர்ச்சி குறித்து விவாதித்தனர். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு, மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. 

திமுக ஒரு நல்ல கூட்டணி

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "தேர்தலைப் பற்றி அன்னை சோனியா காந்தி பேசினார்கள். தேர்தலில் சந்திக்க இருக்கும் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன, நம்முடைய பலம் என்ன, கூட்டணி கட்சிகளின் பலம் என்ன என்பதைப் பற்றி விசாரித்தார். கட்சிக்குள்ளும் வெளியிலும் இணைந்து செயல்பட வேண்டும். கூட்டணிக்கட்சிகளோடு சிறந்த நட்புறவை பாராட்ட வேண்டும் என்று சொன்னார். திமுக ஒரு நல்ல கூட்டணி, அவர்கள் நம்முடைய சிறந்த நண்பர்கள், அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை அறுவுறுத்தினார். 

தமிழகத்தில் பரப்புரை செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

அடுத்ததாக, பிரியங்க காந்தி பேசியதை பகிர்ந்துகொண்ட கே.எஸ்.அழகிரி; "நீங்கள் அழைக்கிறபோதெல்லாம் பரப்புரைக்கு வருகிறேன் என்று சொன்னார். தமிழகத்தில் பரப்புரை செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று தெரிவித்ததாக கே.எஸ்.அழகிரி பேசினார். தமிழகத்திற்கு 5 வருடம் கழித்து சோனியா காந்தி வந்திருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.