Tamil News
Tamil News
Friday, 13 Oct 2023 12:30 pm
Tamil News

Tamil News

மகளிர் உரிமை மாநாடு

திமுக சார்பில் நடத்தப்படும் மகளிர் உரிமை மாநாடு இன்று (அக்-14) சென்னையிலுள்ள நந்தனம் YMCA மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முக்தி, சுப்ரியா சூலே, உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இன்று காலையிலேயே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகள் பிரியங்கா காந்தி சென்னை வந்தடைந்தனர்.

சென்னை வந்தடைந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனையடுத்து, அவர்கள் கிண்டியிலுள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகளை தயார் செய்து வைத்திருந்தார் எம்.பி. கனிமொழி. 

ஆலோசனைக் கூட்டம்

இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் வளர்ச்சி குறித்து விவாதித்தனர். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு, மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. 

தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும்

மேலும், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி நிர்வாகிகள் சோனியா காந்தியிடம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது எனவும், தமிழக காங்கிரஸ் கமிட்டியில் காலியாக உள்ள இடங்களை விரைந்து நிரப்பவும் கோரிக்கை வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.  

இவர்களுக்கெல்லாம் வாய்ப்பளிக்க கூடாது

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ல் நியமிக்கப்பட்டார். கடந்த 5 வருடங்களாக ஒருவரே தலைமைப்பதவியில் இருப்பதாகவும், 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒருவருக்கே பல முறையும் போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது எனவும் சோனியா காந்தியிடம் நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 

பெண் ஒருவரை நியமிக்க வேண்டும்
    
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவராக இளைஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கோரிக்கை வைத்திருப்பதாகவும், பெண் ஒருவரை தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று விஜயதாரணி கோரிக்கை வைத்ததாகவும் தெரிகிறது. 

சோனியா அறிவுரை

இதையடுத்து, உட்கட்சி பூசலுக்கு இடம் தராமல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாநில தலைவருக்கு கட்டுப்பட்டு நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அறிவுரை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.