Tamil News
Tamil News
Monday, 16 Oct 2023 12:30 pm
Tamil News

Tamil News

பாஜக கூட்டணியிலிருந்து கடந்த மாதம் செப்-25-ம் தேதி அதிமுக விலகியது இந்திய அளவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து வந்தநிலையில், என்.டி.ஏ கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்து வந்த அதிமுக என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகியது பாஜகவிற்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது. 

இதற்கிடையில், அதிமுகவோடு பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தேர்தல் நேரத்தில் இவர்கள் கூட்டணி வைத்துவிடுவார்கள் என்றெல்லாம் பலர் பேசிவந்தனர். மேலும், பாஜகவிலிருந்து அதிமுக விலகியது வெற்று நாடகம் என்று தற்போது வரையிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிவருகிறார்.  

இந்தநிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 52-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டி பொறுப்பாளர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஒரு பூத்திற்கு 19 பேர் இருக்க வேண்டும்; ஒரு தொகுதிக்கு 2000 பூத்துகள் வருகின்றன. தேர்தல் பணியில் மாவட்டச் செயலாளர்களின் தலையீடு இருந்தால் நேரடியாக புகாரளிக்கலாம் என்றும், மாவட்ட செயலாளர்களுக்கு பயந்து அவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டாம் என்றும் அறிவுறிருத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று சொல்லியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.