Tamil News
Tamil News
Wednesday, 16 Nov 2022 00:00 am
Tamil News

Tamil News

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் 2023 பொங்கலன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளத்தால் படக்குழு கலக்கத்தில் உள்ளனர். 

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறதோ அந்த அளவிற்கு படத்திற்கு சிக்கலும் இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாது. படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே படப்பிடிப்பு புகைப்படங்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த படப்பிடிப்பை சிலர் திருட்டுத்தனமாக படம்பிடித்து வலைத்தளத்தில் பரவவிட்டனர். 

பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளிவிட்டு சண்டையிடும் புகைப்படம் வெளியானது. தொடர்ந்து விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படமும் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோவும் வலைதளங்களில் கசிந்தது. விஜய் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகளும் ஒரு சுரங்கத்தின் அருகில் ஹெலிகாப்டர் ஒன்று இருக்கும் காட்சியும் வெளியாகி உள்ளது. இப்படி படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகியதே பெரும் சிக்கலில் படக்குழுவினரை தள்ளியது. 

இந்த நிலையில், வாரிசு படத்திற்கு அப்படத்தின் தயாரிப்பாளராலேயே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தான் வாரிசு படத்தின் தயாரிப்பாளர். இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தினை தெலுங்கில் அதிக தியேட்டர்கள் தரக்கூடாது என்றும், நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டுமென்றும், டப்பிங் படங்களுக்கு குறைவான திரையரங்குகளையே ஒதுக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இவர் தயாரிக்கும் நேரடி தமிழ் படமான வாரிசு தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கர்மா இஸ் எ பூமராங் என்பது போல, இவர் 2019ல் பேசியது தற்போது இவருக்கே ஆப்பாக அமைந்துள்ளது. அதாவது, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் முன்னர் தில் ராஜு பேசியதை சுட்டிக்காட்டி இனிமேல் பண்டிகை காலத்தில் வெளியாகும் டப்பிங் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதனால், வாரிசு படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது தெலுங்கில் இடம் பிடித்தே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் தளபதி விஜய்க்கும் இது பெருத்த ஏமாற்றமே. அதோடு தில் ராஜூ மீது விஜய் ரசிகர்கள் பெரும் கோவத்தில் இருந்து வருகின்றனர்.