Tamil News
Tamil News
Tuesday, 22 Nov 2022 00:00 am
Tamil News

Tamil News

தமிழறிஞர் ஔவை நடராசனின் மறைவை முன்னிட்டு அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின். 

தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் காலமானார். இவரது மறைவிற்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “தமிழன்னையும் தேம்பி அழும் இழப்பு, தமிழாய்ந்த தமிழறிஞர் ஔவை நடராசன் நம்மைவிட்டு பிரிந்தார் எனும் துயர்மிகு செய்தியால் வாடி நிற்கிறோம். காவல்துறை மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும். தமிழுள்ள வரை அவரது புகழ் நம்மிடையே நிலைத்து நிற்கும்” என இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார். 

தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறையில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் இல்லாத ஒருவர் இந்த பதவியில் இருந்த ஒரே நபர் ஔவை நடராசன் மட்டுமே. இவரது தமிழ்ப் பணியை பாராட்டும் வகையில், தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதும், இந்திய அரசு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்துள்ளது. 

இவரது பணிகளுக்கு மேலும் அங்கீகாரம் வழங்கும் விதமாக, இவரது இறுதி நிகழ்வுகள் காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.