Tamil News
Tamil News
Monday, 28 Nov 2022 11:30 am
Tamil News

Tamil News

ஆளுநர்கள் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்களே தவிர வாரிசு அடிப்படையில் இல்லை என்று கனிமொழி எம்.பி.,க்கு புதுச்ச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 

புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சுதந்திர போராட்ட வீரர் பிரசா முண்டா பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கவுரவ தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். 

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “முதலமைச்சர் ரங்கசாமிக்கும் எனக்கும் எந்த விரிசலும் இல்லை. பாசப்பினைப்பு தான் உள்ளது. தமிழக ஆளுநர் காலாவதியானவர் என கருத்து சொல்வதை திமுக எம்.பி கனிமொழி தவிர்க்க வேண்டும். மரியாதை கொடுக்க கூடாது என்கிற எண்ணம் பல பேருக்கு உண்டு. கருத்து கூறலாம், ஆனால் மிக மோசமான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல” என்று காட்டமாக கூறினார். 

முன்னதாக, “தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதியாகி உள்ளது. ஆளுநர் பதவி என்பதே காலாவதியான விஷயம். ஆளுநர் பதவி இல்லையென்றால் இந்நேரம் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்திருக்க முடியும். ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று. அந்த பதவி இல்லாமல் போனாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும். எதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை” என்று எம்.பி., கனிமொழி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.