Tamil News
Tamil News
Sunday, 04 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

தமிழ் சினிமாவில் நேர்த்தியான, வித்தியாசமான வகையில் திரைக்கதை அமைக்கும் இயக்குனர்களை பற்றி ஒரு பார்வை

பாக்யராஜ்:

நடிப்புக்கு நடிகர் திலகம் சிவாஜி என்றால், திரைக்கதைக்கு திலகம் பாக்யராஜ் தான். ஜனரஞ்சக படங்கள் வெளிவந்த 80களில் இவரது திரைக்கதை மிகவும் பிரபலம். எந்த காட்சியை எங்கு வைத்தால் அது மக்களுக்கு பிடிக்கும், எந்த அளவுக்கு ஒரு காட்சியை உயர்த்தி பிடிக்கவேண்டும் என்று சகலமும் அறிந்தவர் நம் பாக்யராஜ். முந்தானை முடிச்சு, தாவணிகனவுகள், சுவரில்லாத சித்திரங்கள், தூறல் நின்னு போச்சு, அந்த ஏழு நாட்கள் ஆகிய படங்களில் காட்சிக்கு காட்சி திரைக்கதை தொடர்பு இருப்பதை நாம் உணரலாம். அவரது படங்களில் காட்சிகள் சங்கிலி தொடர்போல வருவதை நாம் உணர முடியும்.

மணிவண்ணன்: 

வித்தியாசமாக படங்களை இயக்கம் செய்யும் மணிவண்ணனும் நேர்த்தியான திரைக்கதை அமைப்பதில் வல்லவர். தமிழ் சினிமா வாரலாற்றில் அரசியல் வசனங்களையும், அரசியல் நையாண்டியையும் இவரை போல் கையாண்ட இயக்குனர்கள் மிக மிக குறைவு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படமான அமைதிபடையில் திரைக்கதை எப்படி எழுதவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் படம். கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், சின்ன தம்பி பெரிய தம்பி இவரது படைப்புகளில் வெளிவந்த சில சிறந்த படைப்புகள். 

மணிரத்னம்

தமிழ் சினிமாவில் எல்லா அம்சங்களிலும் புதுமையை புகுத்தியவர்களில் முக்கியமானவர் மணிரத்னம். மணிரத்தினம் வரவதற்கு பிறகு நகரம் சார்ந்த மனிதர்களும், நகரம் சார்ந்த கதைகளமும் அதிக கவனம் பெறத்தொடங்கியது. அதோடு அவரது திரைக்கதையும் கவனிக்கப்பட்டது. அவரது படங்களில் திரைக்கதை ஜெட் வேகத்தில் நகராது. மாறாக, காட்சியை இயல்பாக கொண்டு செல்ல அது உதவும். அதற்கு அலைபாயுதே படம் ஒரு உதாரணம். அதில் non-linear முறையில் திரைக்கதை அமைக்க பட்டுருக்கும். இரண்டரை மணிநேர படம் என்றாலும் வேகமில்லாத படமாக இருக்கும், அனால் அது எந்த விதத்திலும் உறுத்தலை ஏற்படுத்தாது. அதே மாதிரி, நாயகன் திரைப்படத்தில் LINEAR SCREENPLAY முறையை கையாண்டு இருப்பார். மௌனராகம், ரோஜா, பாம்பே, இருவர், உயிரே போன்ற படங்கள் ஒரு சில உதாரணங்கள்.

ஷங்கர்:

 சங்கரின் படங்களில் திரைக்கதை கட்சிதமாக, சுறுசுறுப்பாக, படு வேகமாக இருப்பதை நாம் பல படங்களில் பார்த்து இருப்போம். ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்கள் அதற்கு நல்ல உதாரணம். இந்த அளவுக்கு ஜெட் வேகத்தில் படம் நகர ஷங்கர் நாடியது எழுத்தாளர் சுஜாதாவின் உதவியை. சுஜாதா இருக்கும் வரை ஷங்கரின் படங்களில் திரைக்கதை சொதப்பல் என்று எதுவும் நம் கண்களை உறுத்தியதில்லை. இவர்கள் கூட்டணி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய கூட்டணியாக இருந்தது. 

கமல்ஹாசன்: 

இயக்குனராக கமல்ஹாசன் மிகக்குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும், திரைக்கதை ஆசிரியராக பல படங்களில் பங்காற்றியுள்ளார். அவர் எழுதிய தேவர்மகன், அன்பே சிவம், ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற படங்களின் திரைக்கதை வித்தியாசமானவை. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத அளவுக்கு வித்தியாசமான வகையில் ஒவ்வொரு படங்களையும் கொடுத்திருப்பார். விருமாண்டியில் ஜப்பானிய திரைப்படமான ரொசோமோன் படத்தின் திரைக்கதை அணுகுமுறையை  தழுவி கதையை சொல்லி இருப்பார். அதிலும்  எந்த வகையிலும் பார்வையாளர்களை குழப்பாமல் சொல்லிருப்பார். அதே போல் விஸ்வரூபம், விருமாண்டி, ஹே ராம் படங்களில் non-Linear முறையில் கதையை நகர்த்தி இருப்பார்.

வெற்றிமாறன்: 

இதுவரை தோல்வியே காணாத இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான். தான் இயக்கிய படங்களில் இதுவரை நடிகர்களுக்காக எந்தவகையிலும் சமரசம் செய்து கொள்ளாதவர். அவரது படங்களில் ரவுடிசம் இருந்தாலும் அதில் துளியும் திரைக்கதை தொய்வோ அல்லது நம்ப முடியாத திரைக்கதை கூறுதலோ இருக்காது. ஒவ்வொரு காட்சியும் மற்றொரு காட்சிக்கு நம்மை அழகாக நகர்த்தி செல்லும். அந்த வகையில் இவர் இயக்கிய ஆடுகளம் படத்தை சிறந்த திரைக்கதை படமாக நாம் அணுகலாம்.

லோகேஷ் கனகராஜ்: 

சமீபத்திய தமிழ் சினிமாவின் மட்டுமல்ல தென்னிந்தியா சினிமாவின் ஹாட் இயக்குனர் என்றால் அது லோகேஷ் தான். லோகேஷின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்கு அவரது நேர்த்தியான திரைக்கதைக்கு சேரும். திரைக்கதையின் அவசியத்தை அவரது மானசீக குருவான கமல்ஹாசனிடம் இருந்து அவர் கற்றிருக்கிறார். அதன் காரணமாகவே அவரது மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அனைத்து படங்களும் மிக நேர்த்தியான முறையில் திரைகதையை வடிவமைத்து இருப்பார் லோகேஷ்.