Tamil News
Tamil News
Tuesday, 06 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

விறுவிறுப்பாக நடந்து வரும் ஃபிபா கால்பந்து உலகக்கோப்பையின் நாக் அவுட் சுற்றில் தென் கொரியாவை தோற்கடித்த பிரேசில் 8 வது முறையாக ஃபிபா உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

ஃபிபா உலகக்கோப்பை

உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக்கோப்பை தொடரான ஃபிபா உலகக்கோப்பை கடந்த நவ.20 தேதி தொடங்கியது. இந்த உலகக்கோப்பை தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாக் அவுட் சுற்றுகள்

ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பையில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில், லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. 

தென்கொரியாவை வீழ்த்திய பிரேசில்

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி தோஹாவில் உள்ள ஸ்டேடியம் 974-இல் நடந்த 16-வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 

காயத்தால் ஓய்வில் இருந்த பிரேசில் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் நெய்மர் இப்போட்டியில் களம்கண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரேசில் அதிரடியை கையாண்டது.  முதல் கோலை வினி ஜூனியர் அடித்தார். அவர் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் அடிக்க, 13வது நிமிடத்தில் நெய்மர் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.

இதன்பின் பிரேசில் வீரர்கள் ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடிக்க முதல் பாதியில் பிரேசில் 4 - 0 என்று முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. அதேநேரம், தென் கொரியாவின் 76-வது நிமிடத்தில் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். என்றாலும் ஆட்ட நேர முடிவில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இதன்மூலம் பிரேசில் 8வது முறையாக ஃபிபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது.