Tamil News
Tamil News
Tuesday, 06 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீது முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

யார் இந்த சூர்யா? 

திமுகவின் நீண்டகால மாநிலங்களவை உறுப்பினரும், கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா, திமுகவில் பிரபலம் அடைய முடியவில்லை என்றும், கட்சியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் கூறி, திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்தவுடன் திமுக மீது சரமாரியாக பல குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். குறிப்பாக கனிமொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததற்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்பது போல குற்றம்சாட்டினார். அதுமட்டும் இல்லாமல் பல அமைச்சர்களின் ரகசியங்களை வெளியிடுவேன் எனவும் கூறி பகிரங்கமாக மிரட்டி வந்தார். 

பாஜகவில் பொறுப்பு 

இந்நிலையில் திமுகவில் இருந்து வந்த நபர், அதுவும் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் மூத்த மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் என்பதால் அவருக்கு பாஜகவில் அதீத அங்கீகாரம் வழங்கப்பட்டது. கட்சியில் சேர்ந்த ஓராண்டுக்குள் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டது மட்டும் இல்லாமல் பாஜகவின் மாநிலத் தலைவராக விஸ்வரூப வளர்ச்சி அடைந்தாரோ அதைப்போல, திருச்சி சூர்யாவும் பாஜகவில் இணைந்த சில மாதங்களிலேயே மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார் . 

கேசவ விநாயகம் மீது குற்றச்சாட்டு

பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம் குறித்து திருமதி டெய்சியுடனான தொலைப்பேசி உரையாடலில், மிகவும் ஆபசமான குற்றச்சாட்டை முன்வைத்தார் சூர்யா. இது பாஜகவினர் இடையே மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் சிலர் கேசவ விநாயகத்திற்கு ஆதரவாகவும் சிலர் கேசவ விநாயகத்திற்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு பாஜகவின் முக்கிய தலைவராக விளங்கிய கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்ட, மதன் ரவிச்சந்திரன் கேசவ விநாயகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாஜகவில் இருந்து விலகல்

இந்நிலையில் இன்று பாஜக உடனான தனது உறவை முடித்துக்கொள்வதாக திருச்சி சூர்யா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதில், “அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் . அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி” என தெரிவித்துள்ளார். 

எல்.முருகன் மீது குற்றச்சாட்டு 

இந்நிலையில் நேற்று பாஜகவில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த திருச்சி சூர்யா, அதன் பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் மீதும் பாஜக மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகத்தின் மீதும் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

இந்த கடிதத்தில் அண்ணாமலை நிச்சயமாக 2026ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என ஆரூடம் தெரிவித்த சூர்யா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோர் அதற்கு தடையாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் தான் கட்சியில் இருந்து விலகுவதற்கு அவர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ள சூர்யா, எல்.முருகன் காயத்திரியை வைத்தும், கேசவ விநாயகம் டெய்சியை வைத்தும் அரசியல் விளையாட்டுகளை விளையாடக்கூடாது என சூர்யா குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கட்சியின் வளர்ச்சிக்கும், தனது வளர்ச்சிக்கும் தடையாக இருக்க, அண்ணாமலையின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அமர்பிரசாத் ரெட்டியும் காரணம் என குற்றம்சாட்டியுள்ள திருச்சி சூர்யா, இனிமேல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். 

பாஜகவின் நிலை

பாஜக பிற மாநிலங்களில் வலிமையான கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் சொல்லிக்கொள்ளும்படி வளர முடியவில்லை. திமுகவை விமர்சனம் செய்வது மட்டுமே தனது அரசியல் நிலைப்பாடு என கொண்டிருந்த அண்ணாமலை தற்போது உட்கட்சி பூசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகிறார். கட்சியில் இணைந்த ஓராண்டிற்குள் தலைவர் பதவியில் அமர்ந்த அண்ணாமலை மீது ஏற்கென சீனியர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் திமுகவில் இருந்து சென்றவர்களும் ஒவ்வொருவராக பாஜகவில் இருந்து விலகிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.