Tamil News
Tamil News
Sunday, 11 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலையடுத்து, இமாச்சல பிரதேச முதலமைச்சராக காங்கிரசைச் சேர்ந்த சுக்வேந்தர் சிங் சுக்கு இன்று பொறுப்பேற்றார். 

இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் மாதம் 8ம் தேதி முடிவுகள் வெளியானது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவியது. ஆனால் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளே பிரதான கட்சிகளாக உள்ளன. இந்நிலையில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் 40 இடங்களைப் பிடித்து ஆளும் பாஜகவை தோற்கடிதது. மீதமுள்ள 25 இடங்களை பாஜக கைப்பற்றியது. 

முதல்வர் வேட்பாளர் யார்? 

தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்ற நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்களிடையேயும், காங்கிரஸ் தலைவர்களிடையேயும் ஏற்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் தீர்மானிக்கும் என்றும், கட்சி மேலிடம் தீர்மானிக்கும் நபரை முதலமைச்சராக ஏற்க தயார் எனவும் இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்தனர். இமாச்சல பிரதேச தேர்தல் பொறுப்பாளாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சிறப்பாக செயல்பட்டு, தனது வியூகங்களாலும், சூறாவளி சுற்றுப்பயணத்தாலும் பாஜகவை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளார். இதனால் பிரியங்கா காந்தியே இமாச்சல பிரதேச காங்கிரஸ் முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிப்பார் என கட்சி மேலிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், சுக்வேந்தர் சிங் சுக்குவை முதலமைச்சராக காங்கிரஸ் மேலிடம் தேர்தெடுத்துள்ளது.  

யார் இந்த சுக்வேந்தர் சிங்? 

இமாச்சல பிரதேசத்தில் சுக்வேந்தர் சிங், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் குழுவின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். மாணவராக அரசியலில் நுழைந்து இன்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் இவர் சட்டத்தில் பட்டம் படித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியினால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், தான் நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை அளிப்பேன் என சுக்வேந்தர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆட்சியில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்த முகேஷ் அக்னிகோத்ரி, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 

முதலமைச்சர் பதவி பிரமாண நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள், மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.