Tamil News
Tamil News
Saturday, 10 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ள ரசிகர்கள் இம்முறை ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

ரசிகர்களால் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் , இந்திய திரைப்படத் துறையில் தன் ஸ்டைல் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி

ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் தன் நண்பரின் உதவியால் “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார். 1975 ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, 1976ல் “கதா சங்கமா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். பிறகு, அதே ஆண்டில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் காட்டியது. இந்த திரைப்படத்தில் ஒரு பெண்ணாசை பிடித்த நடிகராக சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி. சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாய்க்கு கொண்டுவரும் ஸ்டைலினை, இந்த படத்தில் அற்புதமாக செய்திருப்பார். அதனை தொடர்ந்து ‘அவர்கள்’ (1977), ‘16 வயதினிலே’ (1977), ‘காயத்ரி’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.

ஹீரோவான ரஜினி

1977 ஆம் ஆண்டு நடித்த ‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படம் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக இருந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றார்.

மறக்க முடியாத திரைப்படங்கள்

‘பதினாறு வயதினிலே’, ’முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘பில்லா’, ‘போக்கிரிராஜா’, ‘முரட்டுக்காளை’, ‘தில்லு முல்லு’ ‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ ‘நான் சிவப்பு மனிதன்’, ‘ஸ்ரீராகவேந்திரா’ படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘ஊர்காவலன்’, ‘மனிதன்’, ‘தளபதி’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘கபாலி’, ’காலா’, ’பேட்ட’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைப்படங்களாகும். 

உலக ரசிகர்கள் கொண்ட ரஜினி

நடிகர் ரஜினிகாந்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல், ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ரசிகர்களை பெற்றுள்ளார். இன்று பெரிய நடிகர்களாக திகழும் அஜித். விஜய் இரண்டு பேரும் பெற்றிடாத ரசிகர் பட்டாளத்தை தன் தனித்துவமான ஸ்டைலால் ஈர்த்துள்ளார்.

டிசம்பர் 12

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் டிசம்பர் 12 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அவரது ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு வெளிய நின்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருப்பார்கள். ரஜினியும் வருடம் வருடம் வெளியே வந்து தன்னுடைய அன்பான ரசிகர்களுக்கு கையை அசைத்து தனது முகத்தை காட்டிவிட்டு செல்வார். 

ஜெயிலர் படப்பிடிப்பு

இந்த நிலையில், இந்த வருடம் ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கமாட்டார் என கூறப்படுகிறது. ஏனென்றால், நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளாராம். எனவே, ரஜினிகாந்த் ஊரில் இல்லை என்றும், ரசிகர்கள் யாரும் வீட்டின் முன்  காத்திருக்க வேண்டாம் என அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

ரசிகர்கள் ஏமாற்றம்

ரஜினி வீட்டில் இல்லாதது தெரியாமல் வீட்டிற்கு முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.