Tamil News
Tamil News
Sunday, 11 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

மாண்டஸ் புயல் காரணமாக ஏறபட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக முதல்வரின் கான்வாயில் மேயர் பிரியா தொங்கியபடி பயணித்த காட்சிக் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேலியாக விமர்சித்துள்ளார். 

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயலானது கடந்த 6ம் தேதி வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக 7ம் தேதி மாறியது. பின்னர் மேலும் வலுப்பெற்ற புயல் தீவிர புயலாக 8ம் தேதி மாறியது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு நாடுகள் அளித்த மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால்  தீவிர புயலாக இருந்த மாண்டஸ், மீண்டும் புயலாக வலுவிழந்தது. இந்த புயல் நேற்று(டிச.09) இரவு 9.30 மணி முதல் கரையை கடக்க தொடங்கியது.  மாமல்லப்புரம் அருகே கரையை கடக்கத் தொடங்கிய மாண்டஸ் புயல் இன்று (டிச 10) அதிகாலை 2.30 மணியளவில் முழுவதுமாக கரையை கடந்தது.

முதல்வர் பார்வை

இந்நிலையில், 'மாண்டஸ்' புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காசிமேடு துறைமுகத்திற்கு சென்றார். அப்போது அவரது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியாவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும், சட்டமன்ற உறுப்பினர் எபினேசரும் தொங்கியபடி பயணித்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. 

மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

முதல்வரின் கான்வாயில் தொங்கியது குறித்து மேயர் பிரியா சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும், சென்னை மேயர், மாநகராட்சி ஆணையர், சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வகுமார் என்ற சமூக ஆர்வலர் புகார் அளித்திருந்தார். சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு இணையம் வாயிலாக செல்வக்குமார் அளித்த புகாரில், “சாமானிய மக்கள், மாணவர்கள் பேருந்து மற்றும் பிற போக்குவரத்து வாகனங்களில் ஃபுட்போர்ட் அடிப்பது எப்படி குற்றமோ, அதேபோல மேயரின் இந்த செயலும் குற்றமே. எனவே, மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 93 கீழ் மேயர் பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் கருத்து

இந்நிலையில், மேயரின் இந்த செயல் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இது என்ன மேயர் விருப்பமா, நேயர் விருப்பமா" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

சேகர்பாபு பதில்

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “கான்வாயில் ஆணுக்கு நிகராகச் சென்ற பெண்மேயரின் பணியைப் பாராட்ட வேண்டுமே தவிர, விமர்சிக்கக் கூடாது. மேயர் காரில் தொங்கியபடி சென்றது துடிப்பான செயல்" எனத் தெரிவித்துள்ளார்.