Tamil News
Tamil News
Sunday, 18 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

கர்நாடக சட்டசபையில் சாவர்க்கரின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. 

சட்டசபைக்கு சென்ற கடிதம்

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. பெங்களூரில் வாக்காளர்கள் தகவல் திருட்டு, வாக்காளர்கள் பெயர் நீக்க விவகாரம், பணிகளுக்கு 40 சதவிகிதம் கமிஷன் உட்பட பல பிரச்சனைகளை முன்வைத்து, சட்டப்பேரவையில் கூட்டத்தொடரை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். 

இந்நிலையில், சட்டப்பேரவைக்குள் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், ஜகத்ஜோதி பசவண்ணா, சாவர்க்கர் உட்பட ஏழு தலைவர்களின் படங்களை  அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.

முன்னதாக  கர்நாடகா சட்டசபையில் பசவண்ணா, வால்மீகி, கனகதாசா, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்டோரின் உருவப்படங்களை வைக்க வேண்டும் என்று அம்மாநில சட்டபேரவையின் சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார். 

வெடித்த போராட்டம்

இந்நிலையில் சாவர்க்கரின் உருவப்படம் கர்நாடகா சட்டசபையில் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு காங்கிரஸ், சித்தராமையா தலைமையில் சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ”சட்டசபை நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதனால்தான் அவர்கள் சாவர்க்கரின் உருவப்படத்தை சட்டசபை அரங்கில் நிறுவியுள்ளனர். காந்தியின் கொலையில் தொடர்புடைய, சர்ச்சைக்குரிய நபரான சாவர்க்கர் படத்தை வைக்க எந்தத்தேவையும் இல்லை. பாஜக அரசுக்கு எதிராக ஊழல் பிரச்சினைகளை சட்டசபையில் நாங்கள் எழுப்ப போகிறோம் என்பதால் அவர்கள் இந்த புகைப்படத்தை கொண்டு வந்துள்ளனர்” என்று தெரிவித்தார். 

டூப்ளிகேட் காங்கிரஸ்

இதனைத் தொடர்ந்து கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “கருத்தியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். அவரின் படத்தை வைத்ததற்கு போராட்டம் நடத்துகின்றனர். சித்தராமையாவிடம் கேளுங்கள், சட்டப்பேரவைக்குள் தாவூத் இப்ராஹிம் புகைப்படத்தை வைக்கவேண்டும் என சொல்வார். சுதந்திர போராட்டங்களில் தங்களின் பங்கு குறித்து பேசிய காங்கிரஸ் இப்போதில்லை. இப்போது இருப்பது டூப்ளிகேட்(போலி) காங்கிரஸ்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.