Tamil News
Tamil News
Wednesday, 21 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

கர்நாடக சிங்கம் என தன்னைத்தானே பெருமையாக பேசிக்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வார்ரூம் வைத்து தொழிலதிபர்களை மிரட்டி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

5 லட்சம் ரூபாய் வாட்ச்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்சின் விலை எவ்வளவு தெரியுமா என சில யூடியூப் சேனல்கள் வெளியிட்ட செய்தி, இன்று தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் யூடியூப் சேனல் ஒன்று அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் பெல்&ரோஸ் நிறுவனம் தயாரித்த ரபேல் கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சம் ரூபாய் என வீடியோ வெளியிட்டது. இது குறித்து சமூக வலைதளத்தில் திமுகவினர், ஐ.பி.எஸ். ஆக இருக்கும்போதே மாசக் கடைசியில் சாப்பிடக்கூட தன்னிடம் காசு இருக்காது எனக் கூறிய அண்ணாமலைக்கு, 5 லட்சம் ரூபாய்க்கு வாட்ச் கட்டும் அளவிற்கு எப்படி பணம் வந்தது, எங்கிருந்து வந்தது,  என பல கேள்விகளைக் கேட்டுவருகின்றனர். 

செந்தில் பாலாஜி விமர்சனம்

மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அண்ணாமலைக்கும் ட்விட்டரில் வார்த்தைப் போரே நடக்கிறது என சொல்லும் அளவுக்கு, அண்ணாமலையும், செந்தில் பாலாஜியும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில், “பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கைக் கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள  Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் இந்த வாட்ச் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாங்கப்பட்டதா அல்லது அதன் பிறகு வாங்கப்பட்டதா, தேர்தலுக்கு முன்னர் வாங்கப்பட்டது என்றால் அதுகுறித்த விவரத்தை ஏன் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கவில்லை, ஒருவேளை தேர்தலுக்கு பின்னர் வாங்கப்பட்டது என்றால் அதற்கான ரசீது எங்கே என செய்தியார்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.

மேலும் சமூக வலைதளங்களிலும், யூடியூப் சேனல்களும், ஊடகங்களும் வாட்ச் குறித்த சுவாரசியமான செய்திகளை வெளியிட்டுவருகின்றனர். ஆனால் செந்தில் பாலாஜியோ, அண்ணாமலை வார்ரூம் வைத்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாதித்து வருகிறார். ஒருவேளை அந்த பணத்தில் இருந்துதான் இந்த வாட்சை வாங்கினாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து நான் ட்விட்டரிலேயே பதிவிட்டு இருக்கிறேன் ஆனால் நீங்கள் யாரும் அதை செய்தியாக்கவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். 

சிங்கம் திரைப்படம்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, அனுஷ்கா, மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் மெகாஹிட் ஆன திரைப்படம் சிங்கம். அந்த திரைப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பார், பிராகாஷ் ராஜ் மயில்வாகனம் என்ற கதாபாத்திரத்தில், தொழிலதிபர்களையும், ரியல் எஸ்டேட் நடத்துபவர்களையும் மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்துவருவார். அதனை துரைசிங்கம் காதாபாத்திரத்தில் போலீசாக நடித்திருந்த சூர்யா கண்டுபிடித்து மயில்வாகனத்தின் குற்றத்தை வெளிக்கொண்டு வருவார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதால்தான் பல காவல்துறை அதிகாரிகள் தங்களை சிங்கம் சூர்யா போல கற்பனை செய்துகொள்வதும் உண்டு.

கர்நாடக சிங்கம் 

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. கடந்த 2018ம் ஆண்டு ஆடு மேய்த்து, விவசாயம் செய்யப்போகிறேன் எனக்கூறி ஐ.பி.எஸ். பணியை விட்டு வெளியே வந்தார். பின்னர் 2020ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2021ம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் மேடையில் பேசும்போதெல்லாம் பலமுறை தன்னை கர்நாடக சிங்கம் என அவரே கூறியுள்ளார். கர்நாடக மக்கள் அவரை சிங்கம் என்றே அழைப்பார்கள் எனவும் கூறிவந்தார். 

செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வார்ரூம் வைத்து தொழிலதிபர்களை மிரட்டி வருவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வழக்கமாக எதிர்க் கொள்கைகள் உள்ள கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்வதும் குற்றச்சாட்டுகளை வைப்பதும் வழக்கம்தான். கட்சியில் உள்ள தொண்டர்களோ அல்லது நிர்வாகிகளோ செய்யும் தவறுகளை வைத்தே திமுக, அதிமுகவையும், அதிமுக திமுகவையும், திமுக பாஜகவையும், பாஜக திமுகவையும் இதுவரை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் பாஜகவின் மாநிலத் தலைவர் அதுவும் ஐ.பி.எஸ். பொறுப்பில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர் ரவுடிகளைப்போல, தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கிறார் என ஒரு அமைச்சரே குற்றம்சாட்டியுள்ளார் என்றால் இதை வெறும் அரசியல் குற்றச்சாட்டாக மட்டும் பார்க்கமுடியுமா? அல்லது இந்த குற்றச்சாட்டில் உணமையுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 

நடவடிக்கை எப்போது?

மேலும் ஒரு அமைச்சராக இருக்ககூடியவர், அண்ணாமலை வார்ரூம் வைத்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக ட்விட்டரிலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறுகிறார். ஆனால் அவர் எதிர்க்கட்சி அல்ல, ஆளும் திமுகவின் அமைச்சர். இப்படி ஒரு குற்றச்சாட்டை ஆதாரம் இல்லாமல் கூறுகிறாரா? ஆதாரம் இருந்தால் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்சின் விலை என்ன என தொடங்கிய செய்தி, அண்ணாமலை ஆடு மேய்க்கிறாரா அல்லது, ரவுடிகளைப்போல தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கிறாரா என்ற கேள்வியில் வந்து நிற்கிறது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுக்கு இதுவரை ஆதாரம் காண்பிக்கப்படவில்லை அதைப்போல அண்ணாமலை தரப்பும் வாட்ச் விலை குறித்தே மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிவருகிறாரே தவிர தொழிலதிபர்களை மிரட்டும் குற்றச்சாட்டு குறித்து வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.