Tamil News
Tamil News
Wednesday, 21 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக கட்சியின் நிறுவனர் டி.டி.தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு தடை நீக்கம்

தமிழக அரசுக்கு வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில், வனப்பகுதியில் அமைந்துள்ள சுரங்கங்களுக்கு அண்மையில் தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து சுரங்க ஒப்பந்ததாரர்கள் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்க விடுத்து வந்தனர். இதனையடுத்து முடிவை மறு பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் எல்லையிலிருந்து 1 கி.மீ. சுற்றளவில் சுரங்கம் மற்றும் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. 

தொடரும் மற்றொரு தடை

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசின் வருவாய், குவாரி குத்தகை எடுத்திருப்போரின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தேசிய பூங்காக்கள் வனவிலங்கு சரணாலயங்கள். புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களின் எல்லையிலிருந்து 1 கி.மீ தொலைவுக்குள் குவாரிகள் செயல்பட தமிழக அரசு விதித்திருந்த தடை தொடர்கிறது.

டி.டி.வி. தினகரன் கண்டனம்

“காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் குவாரிகள் நடத்துவதற்கு இதுவரை தடை இருந்ததால்தான் காடுகளில் வன உயிரி சூழல் ஓரளவுக்கு பாதுகாப்பாக இருந்தது. ஆனால், தற்போது இந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டால் காப்புக்காடுகளும் கனிம வளத்தால் கொழிப்பவர்களின் வேட்டைக் காடுகளாகிவிடும். சுற்றுச்சூழலைக் காக்கவே அவதாரம் எடுத்தவர்களைப் போல அரிதாரம் பூசி நடிக்கும் தி.மு.க.வினரின் உண்மை முகம் இதுதான்.” என டி.டி.வி. தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.