Tamil News
Tamil News
Sunday, 01 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

2016 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பணமதிப்பிழப்பு

கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்" என்றார். முழு நம்பிக்கையோடு மக்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

தங்களின் பயன்பாட்டுக்காக வங்கிக் கணக்கிலிருந்து ஒற்றை 2,000 ரூபாயைப் பெறுவதற்காக, இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் வரை மணிக்கணக்காக வங்கி வாசல்களில் காத்துக்கிடந்தார்கள். அடுத்த மூன்று மாத காலத்துக்கு, வங்கி ஏடிஎம் வாசல்களில் இந்த வரிசை தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. ஓராண்டு காலத்துக்கு ஏடிஎம்-களில் குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே பணம் எடுக்க முடிந்ததால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.

'பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கறுப்புப்பணத்தை ஒழிப்போம்' என்ற மத்திய அரசு, 'போலி நோட்டுகளை ஒழிப்பதன்மூலம் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்', 'லஞ்சத்தை ஒழிக்க முடியும்', 'டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கப்போகிறோம்' என்றெல்லாம் ஒவ்வொரு இலக்காகக் கூறிக்கொண்டேயிருந்தார்கள். எதிர்க்கட்சிகளிடம் பணப்புழக்கத்தை ஒழித்துவிட்டோம் என்றும்கூட பெருமிதப்பட்டார்கள். 

பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

”நாட்டில் 1000, 500 நோட்டுகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு செய்தது சரியானதே. இதனால், மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும். இதில் எந்த தவறும் இல்லை. இனி அதனை திரும்ப பெற முடியாது” என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 

மேலும், பணமதிப்பிழப்புக்கு எதிராக போடப்பட்ட 58 மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மத்திய அரசுக்கு சாதகம்

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் இனி எதிர்கட்சிகள் உட்பட யாரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தவறானது என சொல்ல முடியாது. மத்திய அரசுக்கு மிகப்பெரிய சாதகமான தீர்ப்பாக அமைந்துள்ளது.
 
மாறுப்பட்ட நீதிபதி

பண மதிப்பிழப்பு தொடர்பான வழக்கில் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். அதாவது, ஒரே அரசாணை மூலம் 1000, 500 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு என 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வின் நீதிபதிகளில் ஒருவர் நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். அவரது மாறுபட்ட தீர்ப்பில், ”பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பில் இருந்து மாறுபடுவதாக உள்ளது. ரிசர்வ் வங்கி சட்ட விதிகள்படி, மத்திய அரசு முடிவெடுக்க முடியாது. மத்திய அரசு சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியத்தை காக்க தேவைப்பட்டால் அவசர சட்டம் கூட நிறைவேற்றி இருக்கலாம். ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்து பிறகே மத்திய அரசு பணமதிப்பிழப்பு முடிவை எடுத்துள்ளது” என தீர்ப்பளித்துள்ளார். 

அதன்படி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.