Tamil News
Tamil News
Tuesday, 10 Jan 2023 00:00 am
Tamil News

Tamil News

சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா. 

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள ஆளுநருக்கு நேரில் சென்று அழைப்புக்கொடுத்தார். இதன்படி நேற்று (09-01-2023) காலை பத்து மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும் என்றும், தமிநாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடம் என்னும் பிற்போக்கு கொள்கை வேரூன்றி உள்ளது எனவும் பேசினார். இதற்கு பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்பட்டு வருகின்றார் என்றும், இந்துவக் கொள்கைகளை தமிழ்நாட்டில் புகுத்த முயற்சிக்கிறார் என விமர்சித்தனர். 

இந்நிலையில் இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை கண்டித்து, காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். மேலும் எங்கள் நாடு தமிழ்நாடு, ஆளுநரை நீக்குக போன்ற கோசங்களையும் திமுகவின் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பினர். 

ஆளுநர் தவிர்த்த வார்த்தைகள்!

இந்நிலையில், இன்று நடந்த கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, திராவிடமாடல் போன்ற வார்த்தைகளை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு உரையாற்றினார்.

•    அயலக தமிழர் நாள் என்று குறிப்பிட்ட நிலையில் விவேகானந்தர் பிறந்தநாள் என்ற வார்த்தையை சேர்த்து படித்துள்ளார்.
•    திராவிட மாடல் மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களையும் படிக்கவில்லை
•    திராவிட மாடல் ஆட்சியை திமுக அரசு வழங்கி வருகிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் படிக்கவில்லை.
•    சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண் உரிமை, மதநல்லிணக்கம் ஆகிய வார்த்தைகளையும் புறக்கணித்தார்.
•    சட்டம்-ஒழுங்கு சிறப்பாக நிலைநாடுவதால் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் தவிர்த்துள்ளார்.
•    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வந்து தமிழாக இருக்கட்டும் என்ற கலைஞரின் மேற்கோளையும் ஆளுநரை புறக்கணித்தார்.
•    தமிழ்நாடு அரசு என்ற இடங்களில் எல்லாம் இந்த அரசு என்று ஆளுநர் படித்தார்.

 முதலமைச்சர் தீர்மானம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்றப் பேரவையில் உரையாற்றினார். அதில், ”ஆளுநருக்கு வரைவு உரையானது தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும் தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.

பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம் ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல. அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.

ஆகவே சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் அவர்கள் இணைத்து விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.

அப்போது ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்தநிலையில் அவரை கண்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதால் தேசிய கீதம் போடுவதற்கு முன்னர் ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார்.
 
முதலமைச்சரை சாடிய எச்.ராஜா

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் முடிவு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவினர் அதற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். 

அதன்படி முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா. 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள 18 சித்தர் கோவில் கும்பாபிஷே விழாவிற்கு வருகை தந்த பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம் ஆளுநர் விவகாரம் பற்றி கேட்டபோது, “ சட்டப்பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். முதலமைச்சர் பேசியது மரபு அல்ல. இந்த மாதிரி ஏற்பு இல்லாத விஷயங்களை ஆளுநர் படிக்காமல் தவிர்ப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே ஆந்திரா, கேரளாவில் ஆகிய மாநிலங்களில் பேசியுள்ளனர்.கவர்னர் அவர்கள் இந்த ஊழல் அரசாங்கத்தை பற்றி உரையில் கூறமால் தவிர்த்துவிட்டு சென்றதற்கு ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவிக்க வேண்டும். அவ்வையார், பாரதியார் குறித்த கவிதைகளை ஆளுநர் படித்தது அவைக்குறிப்பில் இருக்காது என்கிறார். இதுதான் திராவிட மாடல் அமைதி பூங்கா, இது எல்லாம் இருக்கும் என கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஸ்டாலின் IS MOST IMMATURE CHIEF MINISTER?

STALIN IS MORE DANGEROUS THAN KARUNANIDHI  என ஒரு ஆண்டுக்கு முன்னே சொன்னதை தற்போது முதல்வர் ஸ்டாலின் நிருபித்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் IS MOST IMMATURE CHIEF MINISTER என நிரூபணம் ஆகி உள்ளது. முதலமைச்சர் தன்னுடைய நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்பார் தன்னை திருத்திக் கொள்வார் என பாஜக நினைகிறது” என கூறினார்.