Tamil News
Tamil News
Friday, 20 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் 2 வது போட்டியில் ஆட உள்ள இந்தியா

முன்னிலையில் உள்ள இந்தியா

ராய்ப்பூர், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. கடந்த ஆட்டத்தில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் உதவியுடன் (208 ரன்கள்) இந்தியா 349 ரன்கள் குவித்தது. ஆனாலும் நல்ல பார்மில் இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா (34 ரன்), சூர்யகுமார் யாதவ் (31 ரன்), விராட்கோலி (8 ரன்), இஷான் கிஷன் (5 ரன்) உள்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. குறிப்பாக மிடில் வரிசை பேட்டிங்கில் தடுமாற்றதை பார்க்க முடிந்தது.

கவலையளிக்கும் இந்திய பந்துவீச்சு

இதே போல் 131 ரன்களுக்குள் நியூசிலாந்து அணியின் 6 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த இந்திய பவுலர்கள் அந்த உத்வேகத்தை கடைசி வரை தொடர முடியாததால் வெற்றியை கடும் போராட்டத்துக்கு பிறகே எட்டிப்பிடிக்க முடிந்தது. அதாவது 337 ரன்கள் திரட்டிய நியூசிலாந்து அணி நூலிழையில் தோல்வியை தழுவியது. எனவே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கும், கடைசி கட்ட பந்து வீச்சும் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். மொத்தத்தில் இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி தொடரை கைப்பற்றும் வேட்கையுடன் இந்தியா களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை. 

வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட நியூசிலாந்து 

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை முக்கிய வீரர்களான கேன் வில்லியம்சன், டிம் சவுதி ஆகியோர் இல்லாவிட்டாலும் கூட முதல் ஆட்டத்தில் கடும் சவால் அளித்தது. பேட்டிங்கில் மைக்கேல் பிரேஸ்வெல் (140 ரன்), மிட்செல் சான்ட்னெர் (57 ரன்) மிரட்டினர். இந்த ஆட்டம் நியூசிலாந்துக்கு அணிக்கு வாழ்வா-சாவா போராட்டம் எனலாம். இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும். இதுவரை இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வெல்லாத நியூசிலாந்து அந்த மோசமான வரலாற்றை மாற்றி அமைக்க மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ராய்ப்பூர் ஸ்டேடியத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல்முறையாகும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. சுமார் 60 ஆயிரம் ரசிகர்கள் இந்த் போட்டியை காண உள்ளது குறிப்பிடத்தக்கது.