Tamil News
Tamil News
Friday, 03 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பொறுப்பாளர்களுள் ஒருவராக தமிழ்நாடு பாஜக அண்ணாமலையை நியமித்து பாஜக தலைமை அறிவித்துள்ளது. 

கர்நாடக தேர்தல் 

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட, பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய எந்த கட்சிக்கும் போதுமான பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 113 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்க தகுதிபெறும். ஆனால் அந்த தேர்தலில், பாஜக 104, காங்கிரஸ் 80 மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதனால் ஆட்சியமைக்க எந்த கட்சியும் உரிமை கோர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆனால், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரான எச்.டி.குமாரசாமி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏக்களும் பாஜக பக்கம் சென்றதால் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் மீண்டும் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. ஆனால் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பாஜகவில் பசவராக் பொம்மை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி அம்மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்றார். 

2023 பொதுத் தேர்தல் 

இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், பாஜக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசை படுதோல்வியடைச் செய்ய வேண்டும் என்று பாஜக தலைமை கருதுகிறது. இதனால் தேர்தலுக்கான பணிகளை இப்பொழுதே தொடங்கியுள்ளது. அதன் முதல்படியாக கர்நாடக மாநில பொதுத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் நியமித்து ஜே.பி.நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

இயற்கை விவசாயி அண்ணாமலை

தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் கடந்த 2021ம் ஆண்டு இணைவதற்கு முன்னர், அவரது சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்துகொண்டிருந்தார். கர்நாடகாவில் தான் வகித்து வந்த காவல் அதிகாரி பொறுப்பை விடுத்து இயறகை விவசாயத்தில் ஆர்வம் உள்ளதாகவும், அதையே வாழ்நாள் முழுவதும் செய்யப்போவதாகவும் கூறி,  இயற்கை விவசாயம் செய்ய பல இளைஞர்களுக்கும் தூண்டுதலாக இருந்தார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தீடீரென பாஜகவில் இணைந்து அரசியலில் குதித்தார். 

சாகும் வரை கன்னடர்

முன்னதாக 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தனது விருப்ப ஓய்வு நிகழ்ச்சியின்போது தான் தமிழராக இருந்தாலும் சாகும் வரை கன்னடராக இருப்பேன் எனக்கூறினார். இது கர்நாடக மாநில இளைஞர்களிடம் பிரபலமானது. மேலும் அவர் கர்நாடகாவில் 10 ஆண்டுகள் பணியாற்றியதால் அங்கு ஓரளவு பிரபலமான நபராக பார்க்கப்படுகிறார். இதன் அடிப்படையிலேயே இந்த முறை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் நிற்பதற்கே தயங்கிக்கொண்டிருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கர்நாடக மாநில பொதுத்தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.