Tamil News
Tamil News
Sunday, 19 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

ஒரு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியலின் அங்கமாக மாறியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்ததையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஈரோடு கிழக்குத் தொகுதி பரபரப்பாகவும் திருவிழா போன்றும் காட்சி அளிக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களை வசீகரிப்பதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் அரங்கேற்றும் செயல்பாடுகளைப் பற்றி பார்க்கலாம். 

தமிழக அரசியலில் தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகள் பரபரப்புடன் செயல்படுவது ஒரு புறம் என்றால், மக்கள் கொண்டாட்டமாக இருப்பார்கள் என்பது இன்னொரு புறம். தற்போதைய அரசியல் களம் அப்படி. தேர்தல் என்றாலே, பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் மத்தியில் நிகழ்த்தப்படும் வேடிக்கை காட்சிகளும், சுவாரஸ்யமாக நடக்கும் பணப்பட்டுவாடாவும் நினைவுக்கு வரும். அதுவும் இடைத்தேர்தல் என்றால் கூடுதல் சுவாரஷ்யம். அப்படி பிப்.27 அன்று நடைபெறவிருக்கும் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெருவதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் மக்களிடத்தில் பணத்தைக் கொட்டுவதை, இது என்ன அவர்கள் பணமா நம்ம பணம் தானே என்று, பணப்பட்டுவாடாவை மக்களே ஜனநாயகப்படுத்துகிறார்கள் என்று ஒருசில பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டு 8,900 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருந்தது. ஆனால் இம்முறை அதிமுக நேரடியாகக் களம் காண்கிறது. அதிமுக கூட்டணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். ஓ.பி.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் டிடிவி தினகரன் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் குக்கர் சின்னம் கிடைக்காததாலும் பின்வாங்கினார்கள். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நான்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் திமுக தரப்பினர் தங்களுடைய 20 மாத காலத்தில் செய்த நலத்திட்டங்களைப் பற்றி மக்களிடத்தில் எடுத்துக்கூறியும், எதிர்க்கட்சியினர் விடியா திமுக அரசின் செயல்படுத்தப்படாத வாக்குறுதிகளைக் குறிப்பிட்டும் பரப்புரை செய்து வருகின்றனர். கருத்தியலைப் பேசி வாக்குகளை அறுவடை செய்த காலம் போய், ஒரு வோட்டுக்கு இவ்வளவு என்று டீலிங் பேசி வாக்குகளை அறுவடை செய்யும் காலத்தில் பயணிக்கும் அரசியல் தலைவர்களிடம் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது தவறானதுதான் என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களை திமுக அரசு ஆட்டு மந்தைகள் போல அடைத்து வைக்கிறார்கள், ஓட்டு கேட்டு போனால் வீட்டில் யாரும் இருப்பதில்லை என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அடைத்து வைக்கப்படும் மக்களுக்கு மூன்று வேலை அசைவ சாப்பாடு, பணம் மற்றும் பொழுது போக்கிற்காக திரைப்படங்களை திரையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது திருமங்கலம் இடைத்தேர்தலை மிஞ்சும் அளவிற்கு தற்போது ஈரோட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். 

இடைத்தேர்தல் என்பது எதிர்பாராமல் வருவது. இனி வரும் காலங்களில் இடைத்தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அளவிற்கு மக்களை பணப்பட்டுவாடா மூலம் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிவிட்டுச் செல்லும் அரசியல் தலைவர்கள் இருக்கும்வரை மக்களும், இது என்ன அவர்கள் பணமா எங்கள் பணம்தானே என்று பணப்பட்டுவாடாவை ஜனநாயகப்படுத்திக்கொள்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.