Tamil News
Tamil News
Sunday, 19 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 100 மலர்கள் (100 Flowers)என்ற மாணவர் குழுவிற்கும், வலதுசாரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்திற்கும் (ஏ.பி.வி.பி) இடையில் நேற்று(19.02.2023) மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர், சேதப்படுத்தப்பட்ட மாணவர் சங்க அலுவலகம், சுவற்றில் எழுதப்பட்ட வலதுசாரி அரசியல் வாசகங்கள் எழுதப்பட்டன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்களின் படங்களும் காணொளிப் பதிவுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில், இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் கற்றலுக்கான இடங்கள் மட்டுமல்ல, விவாதம், விவாதம் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்குமான இடங்கள். ஜேஎன்யுவில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை சேதப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1627578322392879104?s=20

ஜேஎன்யூவில் நடந்தது என்ன.?
 

100 மலர்கள் என்பது புத்தக விவாதங்கள், படங்களை திரையிடுவது போன்ற நிகழ்வுகளை நடத்தி வரும் ஒரு மாணவர் குழு. நேற்று மாலை 9 மணிக்கு 100 மலர்கள் குழுவினர் TEFLAS என்ற மாணவர் சங்கத்தின் அலுவலக அறையில் 'ஜானே பி தோ யாரொ' என்ற இந்தி திரைப்படத்தைத் திரையிட இருந்தனர். இதே சமயம், அங்கு ஏ.பி.வி.பி அமைப்பினர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடக் கூடியிருந்ததாக தெரியவருகிறது. அவர்கள் திரைப்பட நிகழ்விற்கு இடமளிக்காமல் பிரச்சனை செய்ததாகவும் பெரியார் உள்ளிட்டத் தலைவர்களின் படங்களைச் சேதப்படுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். 

ஏ.பி.வி.பி அமைப்பினர் TEFLAS அலுவலகத்தின் சுவற்றில் சத்ரபதி சிவாஜியின் உருவப்படத்தை மாட்டியிருந்தனர் என்றும், இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள் இதனைச் சேதப்படுத்தியதாகவும் இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள். ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் திரைப்படத்தை நடக்க விடாமல் தடுத்ததாகவும், 100 மலர்கள் குழுவின் மாணவர்களைத் தாக்கியதாகவும் கூறினார். சம்பவத்தைக் கேள்விப்பட்டு நாங்கள் அங்கே சென்றபோது, பெரியார், மார்க்ஸ், லெனின் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறது ஏ.பி.வி.பி. TEFLAS அலுவலகத்தில் மார்க்ஸ், லெனின், போன்ற இடதுசாரி தலைவர்களின் உருவப்படங்கள் உள்ளன. நேற்று நாங்கள் சத்ரபதி சிவாஜியின் உருவப்படத்தை அங்கு வைக்கச் சென்றபோது, இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதைத் தடுத்தனர். நாங்கள் அதையும் மீறி அதை வைத்தபோது, அப்படத்தை அவர்கள் சேதப்படுத்தி அகற்றினர். இதனை நாங்கள் தட்டிக்கேட்ட போது அவர்கள் எங்களைத் தாக்கினார்கள் என்று ஏ.பி.வி.பி. தரப்பில் தெரிவிக்கிறார்கள். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனமான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்களை கல்வித் துறையில் மட்டுமின்றி, அரசியல் பொருளாதாரத் துறையிலும் ஒளிரச் செய்து வருகிறது. இங்கு இந்திய நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் நிலைப் பெற பல்வேறு சித்தாந்தங்கள் பற்றிய கருத்தியல் விவாதங்கள் நடப்பதும், சமூகநீதி,பெண்ணுரிமை, சமத்துவம், மதச் சார்பின்மை மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட கோட்பாடுகள் பற்றி மாணவர்களிடையே கருத்தரங்கம், பயிலரங்கம் நடப்பதும் பல ஆண்டுகளாக தொடர்கின்றன.

2014 -இல் மோடி தலைமையில் ஒன்றிய பா.ஜ.க அரசு அமைந்த பின்னர் ஜே.என்.யூ இந்துத்துவ மத வெறிக் கும்பலின் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. மற்றும் இந்துந்துவ குண்டர்கள் ஜே.என்.யூ வில் அத்து மீறி நுழைந்து, முற்போக்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், குறிப்பாக இஸ்லாமிய, தலித் மாணவர்களை இலக்காக வைத்து வன்முறையை ஏவுவதும் தொடர் நிகழ்வுகள் ஆகி விட்டன. இதற்கு ஜே.என்.யூ நிர்வாகமும் துணை போகிறது. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பொதுவுடமைத் தலைவர்களை இழிவுபடுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலின் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொடூர வன்முறையை ஏவி, தந்தை பெரியார் திருவுருவப்படத்தையும் சேதப்படுத்திய ஏ.பி.வி.பி. கும்பலை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். காயம் அடைந்த மாணவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

https://twitter.com/drramadoss/status/1627610162650546176?s=20

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெரியார் படங்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்க்கழகத்தில் இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகங்களில் நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதை தடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் .