Tamil News
Tamil News
Tuesday, 21 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோட்டில்  இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு தேர்தல் களத்தைப் பொறுத்தவரையில், நியாயமான அமைதியான சுதந்திரமான நேர்மையான ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஆளும் விடியா அரசு முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே நம்பி, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்ததையெல்லாம், திருமங்கலத்தை மிஞ்சுகின்ற வகையில் திருமங்கலம் பார்முலாவை மிஞ்சுகின்ற வகையில், புதிய ஒரு அத்தியாயம் புதிய ஒரு வரலாறு, இனி வரும் காலங்களில் ஈரோடு கிழக்கு பார்முலா என்று தான் பார்க்கப்படும் என்றார். 

வாக்காளர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுத்த வரலாறு எந்தவொரு தேர்தலிலும் கிடையாது. அதேபோல வீட்டுக்கொரு குக்கர் கொடுத்த வரலாறும் கிடையாது. திமுகவினர் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு கை, கால் மட்டும் தான் பிடிக்கவில்லை மற்றபடி அனைத்தும் கொடுத்திருக்கிறார்கள் என்று திமுகவினரை கடுமையாக சாடியிருக்கிறார். 

பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரத்தை திமுக அரசு இதுவரை வழங்கவில்லை. ஆனால் தேர்தல் வருவதையொட்டி அமைச்சர் உதயநிதி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார். இதை எப்படி நம்புவது. செங்கல் நாயகன் ஆட்சிக்கு வந்ததும் நீட்டுக்கு விலக்களிப்பதாக கூறினார். ஆனால் இப்போது வரை ஒன்றும் செய்யவில்லை. உதயநிதி ஒரு குழந்தை போன்றவர். பண்பட்டவராக அவரை நான் பார்க்கவில்லை.

நூல் விலை உயர்வால் 40% தொழில்கள் முடங்கிப் போய் உள்ளன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போலீஸ், ராணுவத்தினர், பொதுமக்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை பார்த்த பெண்மணி ஒருவர் திமுகவினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இறைக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்கிறார். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுகவினர் சர்வாதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். பல கோடி ரூபாய்களை வாரி இறைத்துள்ளனர். மாவட்ட தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். பணம் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதை தடை செய்ய வேண்டும். திமுகவினர் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அவர்கள் எத்தனை முறை டெல்லி சென்றார்கள். எத்தனை பேர் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் தேர்தலில் மக்களை நம்பி தான் நிற்கிறோம். பணத்தை நம்பி நிற்கவில்லை. மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்ததற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இரவு 11 மணிக்கு வந்து என்னை கைது செய்தனர். உடைமாற்றி வருகிறேன் என்று சொன்னால் கூட கேட்காமல் என்னை கைது செய்தனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. 

திமுக அரசு கல்வி பாடத்திட்டத்தை பொதுப்பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது தானே. ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்கள் கொள்கை. ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள். அதிமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.