Tamil News
Tamil News
Wednesday, 22 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

ஈரோடு கிழக்குத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் கடந்த 9-ந்தேதி அன்று ஈரோட்டில் பெருந்துறை ரோடு முத்து மஹால் அருகே பிரமாண்ட மேடை அமைத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக-வுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், பூவை ஜெகன்மூர்த்தி, டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அண்ணாமலைக்கு பதிலாக முன்னாள் எம்.பியும், பாஜக தேசியச் செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவில்லை என்று ஒருபுறம் பார்க்கப்பட்டாலும் அவருக்கு பதிலாக, பாஜக தேசியச் செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டது, சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சந்தோஷமான நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது என்று அதிமுகவினரால் பார்க்கப்படுகிறது. அது என்னவென்றால், அதிமுக வேட்பாளர் தென்னரசு அவர்களை அறிமுகப்படுத்திய இரண்டு நாட்களில் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன். இதைவைத்து தென்னரசுவிற்கு இருக்கும் ராசி அப்படி என்று அதிமுகவினர் புகழ்ந்து வருகின்றனர்.

அடுத்தபடியாக, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தி.குன்னத்தூரில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி-முரளி தம்பதி உட்பட 51 ஜோடிகளுக்கு சமுதாய திருமண விழா, அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன், தி.குண்ணத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மணமக்களின் திருமணத்தை நடத்தி வைத்தபின், விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த திருமண நிகழ்ச்சி ஒரு அற்புதமான நிகழ்ச்சி. எல்லையில்லாத மகிழ்ச்சியில் உள்ளேன். உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று என தெரிந்தபின் ஒருவித அச்சம் ஏற்பட்டது. நிம்மதியே இல்லை. இரவில் உரக்கமும் வரவில்லை. உதட்டளவில்தான் சிரிப்பு இருந்தது. உள்ளத்தில் இல்லை. இங்கு வந்த பின், அம்மா கோயிலில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திருமண மேடைக்கு செல்லலாம் என ஆர்.பி.உதயகுமார் சொன்னார். இருவரது சிலைக்கும் மாலை அணிவித்துவிட்டு நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என வேண்டினேன். தெய்வத்தின் அருள் பெற்ற, சக்தி மிக்க தலைவர்கள் இருவருக்கும் மாலை அணிவித்து விட்டு, உணவருந்தச் செல்லும் போதே எங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்ற நல்ல செய்தி கிடைத்துவிட்டது.

அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள் மற்றும் திமுகவின் பி-டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அதிமுக மூன்றாக உள்ளது, நான்காக உள்ளது என சொல்ல வேண்டாம். ஒன்றாக உள்ளது என்றே சொல்லுங்கள் என்றார். இந்த 51 ஜோடிகளுக்கும் திருமணம் செய்வதற்கு முன்பாகவே அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என குறிப்பிட்டார். அடுத்ததாக மார்ச் மாதம் இரண்டாம் தேதி அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்ற செய்தி நமக்கு கிடைக்கும். எனவும், நாம் அடுத்தடுத்து வெற்றிகளை நோக்கி செல்கின்றோம் எனவும் எடடபடி பழனிச்சாமி திருமண விழாவில் பேசினார்.