Tamil News
Tamil News
Thursday, 23 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் மாவட்டம், பர்ஷி தாலுகாவில் உள்ள போர்காவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர துக்காரம் சாவன். இவர் தனது நிலத்தில் அறுவடை செய்த 512 கிலோ வெங்காயத்தை 70 கி.மீ தூரத்தில் உள்ள சோலாப் மண்டிக்கு எடுத்துச் சென்றார். அங்கு ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. வேறு வழியின்றி வந்த விலைக்கு விற்று விட்டார் ராஜேந்திர துக்காரம். கழிவுகள் போக அவருக்கு கிடைத்தது ரூ.2.49 மட்டுமே. அதுவும் காசோலையாக வழங்குவதால் 49 காசுகளை கழித்துவிட்டு அவரிடம் இரண்டு ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அதுவும் 15 நாட்கள் கழித்து தான் அந்த இரண்டு ரூபாயை அவர் வங்கியில் இருந்து பெற முடியும். 

இதுகுறித்து ராஜேந்திர துக்காராம் சொன்னதாவது; என்னுடைய வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு விலை பேசினார்கள். அதன்படி 512 கிலோவிற்கு 512 ரூபாய் வந்தது. அதில், வெங்காயத்தை ஏற்றி வந்த வாகன கட்டணம், வாகனத்தில் இருந்து வெங்காயத்தை கீழே இறக்கிய கட்டணம், எடை போட்டதற்கான கட்டணம், மண்டி கமிஷன் என எல்லாவற்றையும் சேர்த்து மண்டி வர்த்தகர் ரூ.509.50 கழித்துவிட்டார். மீதமிருந்த ரூ.2-க்கான காசோலையை கையில் கொடுத்தார். 

விதைகளின் விலை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை எல்லாம் கடந்த 4 ஆண்டுகளாக இரண்டு மடங்காகிவிட்டது. 500 கிலோ வெங்காயத்தை விளைவிக்க நான் ரூ.40,000 வரை செலவு செய்துள்ளேன். ஆனால், இந்த முறை எனக்கு 2 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது என்று ராஜேந்திர துக்காராம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.