Tamil News
Tamil News
Friday, 24 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, ஈரோட்டில் உள்ள சம்பத் நகரில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், உங்களை தேடி வந்திருக்கிறோம், உங்களை நாடி வந்திருக்கிறோம். உங்களிடத்திலே கை சின்னத்திலே ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கக்கூடிய வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்பதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறோம். 

"பாராட்டி போற்றி வந்த பழமை லோகம்; ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்" என்று தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டைப் பற்றி எடுத்துச் சொல்கிறபோது, அவர் பெருமையோடு குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட ஈரோட்டின் மைந்தராக இருப்பவர் தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள். எங்கள் உயிரோடு கலந்த ஓர் தான் இந்த ஈரோடு. பெரியார் பிறந்த மண் இந்த ஈரோடு. பேரறிஞர் அண்ணா வாழ்ந்த ஊர் இந்த ஈரோடு. தலைவர் கலைஞர் குடியிருந்த ஊர் ஈரோடு. திமுகவின் அடித்தளமே இந்த ஈரோடு தான். நான் பிரச்சாரத்திற்கு வரும்போது தான் இந்த பகுதியின் பெயர் சம்பத் நகர் என்று கேள்விப்பட்டேன். இந்த சம்பத் நகரில் நடக்கக்கூடிய இந்த பரப்புரையில், சம்பத் மகனுக்கு நான் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். 

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்பொறுப்பேற்று இந்த இரண்டு ஆண்டு காலத்தில், மகளிருக்கு இலவச பேருந்து, மாணவர்களுக்கு ஏற்கனவே மதிய உணவு திட்டம் என்று இருந்தாலும் அவர்கள் உணவு அருந்தாமலே பள்ளிக்கு வருவதை ஒரு மாணவனிடம் கேட்டறிந்த உடனே, காலை உணவு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் கிடையாது தமிழ்நாட்டில் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதேபோல், உழவர்களுக்கு இலவச மின்சாரம் இந்த திட்டத்தை இந்தியாவிலே முதன்முதலாக கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்டது. 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த கால ஆட்சியில் ஒரு கோரிக்கை வைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தினீர்கள். எங்களின் வாழ்வாதாரம் செழிப்பதற்கு விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கிற மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று போராடுனீர்கள். ஆனால், திமுகவிடம் இதுவரைக்கும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை, இருந்தாலும் நானே அதை நிறைவேற்ற முன்வருகிறேன். இனிமேல் நீங்கள் மின்சார கட்டணமாக ஒரு பைசாகூட கட்ட தேவையில்லை, இனிமேல் உங்களுக்கு இலவச மின்சாரம் என்று கலைஞர் அவர்கள் அறிவித்தார்.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 85% வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். ஐந்தாண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத்தான் வாக்குறுதிகளாக கொடுத்திருக்கிறோம். ஐந்தாண்டு காலம் எங்களுக்குத் தேவையில்லை. இந்த ஆண்டுக்குள்ளாக எல்லா பணிகளையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அந்த மீதம் இருக்கிற வாக்குறுதியில் முக்கியமானது ஒன்று இருக்கிறது. அதை எதிர்க்கட்சித் தலைவர் மறந்தாலும் நான் மறக்கவில்லை. அது பெண்களுக்கு வழங்கப்படுகிற உரிமைத்தொகை. நிதி நிலைமையை கடந்த ஆட்சியில் சீராக வைத்துவிட்டு இருந்தீர்கள் என்றால், நாங்கள் வந்தவுடனே அதையும் நிறைவேற்றி இருப்போம். கொள்ளையடித்துவிட்டுச் சென்றாலும் பரவாயில்லை கஜானாவை காலி செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இவைகளெல்லாம் சரி செய்யப்பட்டவுடன் மார்ச் மாத நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது,  பெண்களுக்கான உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பதை அறிவிக்கப்படும். இது ஸ்டாலின் சொல்கிற வார்த்தை, எடப்பாடி சொல்கிற வார்த்தை இல்லை. 

கடந்த முறை தம்பி உதயநிதி ஸ்டாலின் பரப்புரைக்கு வந்தபோது காங்கிரஸ் வேட்பாளரை 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பேசிச் சென்றிருந்தார். ஆனால், நான் கேட்கிறேன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரை ஐம்பதாயிரமோ, அறுபதாயிரமோ இல்லை, அதிமுக டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று மக்களிடத்தில் அவர் கேட்டுக்கொண்டார்.