Tamil News
Tamil News
Monday, 27 Feb 2023 00:00 am
Tamil News

Tamil News

'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 10 சென்னை மாநகராட்சி பள்ளிகளின் வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன. சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப்பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 119 தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 98,633 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 3013 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சிஐடிஐஐஎஸ், ‘நமக்கு நாமே’ திட்டம், ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 மற்றும் நிர்பயா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறுநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பள்ளிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உறுதுணையாக உள்ளன. 

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டு, ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஓராண்டுக்கு இணையதள வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை அமைக்க ரூ.56,60,100 மதிப்பீட்டில் பணி டோரண்ட் கேஸ் சென்னை தனியார் லிமிடெட் நிறுவனத்தின் சார்பிலும், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பெறுநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் ரூ.28 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் நிதி பங்களிப்புடன் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த விரும்பும் பெரு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்புகொள்ளலாம்.