Tamil News
Tamil News
Monday, 27 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

யாரிடமும் ஜனநாயக உணர்வே இல்லை என அதிமுக ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு மனம் குமுறியுள்ளார். 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் 

ஈரோடு கிழக்குத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. மறைந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அதிமுக சார்பில் தென்னரசு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்திலிருந்தே ஈரோடு கிழக்குத் தொகுதி சூடுபிடிக்கத் தொடங்கியது. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். கடந்த 25ம் தேதியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்த நிலையில், நேற்று (27-02-2023) அங்கு வாக்குப்பதிவு நடைப்பெற்றது. 

விறுவிறுப்பான வாக்குப்பதிவு 

ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தமுள்ள 138 வாக்குச்சாவடிகளிலும், நேற்று காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 6 மணிக்கு முடிய வேண்டிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது. 

மக்களிடம் ஜனநாயக உணர்வு இல்லை 

இந்நிலை வாக்குப்பதிவு குறித்து அதிமுக வேட்பாளர் தென்னரசு பேசும்போது, மக்கள் காலை முதலே உற்சாகத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவித்தார். மேலும் மாலை 6 மணிக்கு பிறகும் மக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தென்னரசு, வழக்கமாக மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் 6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாசல் கதவு மூடப்படும், 6 மணிக்கு பிறகு வருபவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாது. ஆனால் இன்று 6 மணிக்கு பிறகு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. இது ஜனநாயக ரீதியாக தவறு எனக் கூறினார். மேலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது, ஆனால் 6 மணிக்கு முன்னால் வராதவர்களிடம் ஜனநாயக உணர்வு இல்லை என்று அர்த்தம், யாரிடமும் ஜனநாயக உணர்வே இல்லை என்றும் அதிமுக வேட்பாளர் தென்னரசு தெரிவித்தார்.