Tamil News
Tamil News
Tuesday, 28 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

திருப்பூரில் அடுத்தடுத்து ஐந்து கடைகளில் கொள்ளை சாக்லேட் தின்றுவிட்டு மலம் கழித்து சென்ற திருடன். 

திருப்பூர் மாநகரில் உள்ள கே.வி.ஆர்.நகர் பகுதியில் மேற்கு பிரதான சாலையில் ஆறு கடைகளை கொண்ட திருமலை காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் மளிகைக் கடை, துணிக்கடை, பேன்சி கடை, இ சேவை மையம் மற்றும் முடி திருத்தகம் என ஐந்து கடைகள் செயல்பட்டுவருகிறது. ஒரு கடை காலியாக உள்ளது. இதே வீதியில் திருப்பூர் மத்திய காவல் நிலையம் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று  கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதில் மளிகை கடையில் திருடும்பொழுது அங்கிருந்த சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு கடைக்கு வெளியே படியில் மலம் கழித்து விட்டும் சென்றுள்ளனர்.

காலையில் கடை  திறக்க உரிமையாளர்கள் வந்து பார்த்தபொழுது அனைத்து கடைகளிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டியில் இருந்த பணமும் திருடப்பட்டிருப்பதைக் கண்டு திகைப்படைந்தனர். இதனை அடுத்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளைன்  குறித்து விசாரித்து வருகின்றனர். அருகிலுள்ள கடைகளின் சிசிடிவி கேமரா பதிவில் அவ்வழியாக கடப்பாரையை எடுத்துக்கொண்டு ஒரு வாலிபர் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

பதிவான சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநிலத்தைச் சேர்ந்த நபராக இருப்பாரோ என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். மத்திய காவல் நிலையம் அமைந்துள்ள அதே வீதியில் சிறிது தூர இடைவெளியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.