Tamil News
Tamil News
Tuesday, 28 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

எரிவாயு சிலிண்டர் விலைவாசி உயர்வைக் கண்டித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. 

தற்போது அந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மூலம் அடுப்பை எரிக்கும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சிலிண்டர் விலை ஏற்கனவே பலமடங்கு உயர்ந்திருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் தலை மீது சுமையை ஏற்றுவது நியாயமா? 

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து தமிழக மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி, அன்றாட செலவினங்களையே எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். தற்போது எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது. 

இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றாமல் உள்ளது. இவ்வாறு மத்திய மாநில அரசுகள் நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. 

ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களைப் பற்றி துளியளவும் சிந்திக்காமல் செயல்படும் மத்திய மாநில அரசுகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சிலிண்டர் விலைவாசி உயர்வு அடுப்பு எரிக்கும் பெண்களுக்கு வயிறு எரிய செய்திருக்கிறது.