Tamil News
Tamil News
Friday, 03 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி கூட்டினார். அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தும், ஓபிஎஸ் மற்றும் அவரது தர்ப்பினர்களான மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. 

இது தொடர்பான வழக்கு முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினார். இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளித்தது. அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சிவில் நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அந்த வழக்கு இன்று (மார்ச்-03) விசாரிக்கப்படுகிறது.

அந்த மனுவில் ஈபிஎஸ்-ஐ இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.