Tamil News
Tamil News
Friday, 03 Mar 2023 11:30 am
Tamil News

Tamil News

பீகார் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாகப் பேசும் வீடியோக்கள் அண்மையில் சமூக ஊடகங்களிலும்  அரசியலிலும் பரவலாக பேசப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று விளக்கமளித்த தமிழ்நாடு காவல்துறை, சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டு தவறாகக் கூறப்படுகிறது என்று தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வெளியான தகவலை அறிந்ததாகவும், தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் பேசி, அங்கு வசிக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை  டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களாகிய நாங்கள், ஒரே தேசம் என்ற கருத்தை நம்புகிறோம். நமது வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் கேவலமான வெறுப்பையும் ஆதரிக்கவில்லை.

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய ஆலைகள் சங்கம் ஆகியவை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வாறு தங்கள் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர் மற்றும் அவர்களின் நலனை உறுதிப்படுத்த அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி அறிக்கை ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.

உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில் மற்றும் சேவை துறையில் புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொது மக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர்.

ஆனாலும், வட இந்தியர்களைப் பற்றி திமுக எம்பிக்கள் கீழ்த்தரமான கருத்துக்களை பேசி வருகின்றனர். திமுக அமைச்சர் அவர்களை பானிபூரி வாலா என்று அழைத்தது மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் அவர்களை வெளியேற்றக் கோருவது இன்று நாம் பார்ப்பதைத் தூண்டியுள்ளது.

மக்களும், அரசும், காவல்துறையும், திமுக மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை ஆமோதிப்பதில்லை. திமுக எப்பொழுதும் இருந்து வந்த பிளவு அவர்களை மீண்டும் சூழ்ந்து வருகிறது, இப்போது இந்த நிலையை சரிசெய்வது அவர்களின் பொறுப்பாகும், மேலும் அவர்களின் செயலிழந்த பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு என்றும் தெரிவித்திருக்கிறார்.