Tamil News
Tamil News
Monday, 06 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெளிமாநில தொழிலாளர்கள் பற்றியான செய்திகள் இந்தியா முழுவதும் பரவலாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பெருநகரங்களில் பெருவாரியாக வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். அவ்வப்போது, ஒரு சில இடங்களில் தமிழர்களால் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களை தாக்குவது போன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவலான நிலையில், தமிழர்கள் மத்தியில் பீதியை கிளப்பியது. குறிப்பாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது தமிழ்தேசியவாதிகளால் வடமாநில தொழிலாளர்கள் பற்றி வெறுப்பு பரப்புரை செய்திருந்தது மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வதந்தியாக பரப்பப்பட்டது மற்றும் பீகார் சட்டப்பேரவையில், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார்கள் என்று பேசியது என மேற்குறிப்பிட்ட சம்பவங்களால், தற்போது வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை விஷ்வரூபம் எடுத்திருக்கிறது.

விஷ்வரூபம் எடுத்திருந்த இந்த பிரச்னை பற்றி அறிந்து கொள்வதற்காக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் 4 பேர் கொண்ட குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். தமிழகம் வந்த குழு, தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் மீது எந்த தாக்குதல்களும் நடத்தவில்லை என உறுதியானதையடுத்து, தவறான வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். 

மேலும், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் போல வதந்தியை பரப்புகிறார்கள், தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று பீகார் பாஜக தலைமைக்கு உறுதியளித்திருந்தார்.

இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், வடமாநிலத்தவர்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பார்ப்பதற்கு குழு அமைக்கும் இந்த தமிழக அரசு, மகராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்கிறார்கள், ஹரியானாவில் 5000 தமிழர்களுக்கு வீடு இல்லை என்று சொல்லிவிட்டார்கள், அப்படியிருக்கும் சூழலில் அவர்களின் பாதுகாப்புகாக குழு அமைத்திருக்கிறார்களா.? அவர்கள் எங்களை தாக்குகிறார்களா, இல்லை நாங்கள் அவர்களை தாக்குகிறோமா என்று கேள்வி எழுப்பினார். 

அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்போடு பேச வேண்டும், மைக் கிடைத்தால் முறுக்கிக்கொண்டு பேசக்கூடாது என சீமானை மறைமுகமாக சாடியதுடன் வடமாநில சகோதரர்கள் மீது தொடரும் வெறுப்பு பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் மாண்பைக் காக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக, பீகார் பாஜக எம்.எல்.ஏவிடம் பேசிய அண்ணாமலை தமிழர்கள் அனைவரும் நல்லவர்கள், பீகார் மாநில தொழிலாளர்களுக்கு எதாவது ஒரு பிரச்னை என்றால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார்.

இதுகுறித்து தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு குறிப்பிட்டதாவது; தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதை குழப்ப அரசியலுக்கு பயன்படுத்துகிற ஒரு போக்கை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-ம் இணைந்து செய்கிறது. வடமாநில தொழிலாளர்கள் தங்களுடைய தாயகத்தில் வேலை செய்யாமல் இன்னொரு மண்ணுக்கு இடம்பெயர்ந்து செல்கிற கட்டாயம் மத்திய அரசால் ஏற்படுகிறது. ஆகவே, இதற்கு முதல் பொறுப்பு மத்திய அரசு தான் என்று குற்றம் சாட்டினார். 

தமிழ்நாடு மொழிவழிப்பட்ட மாநிலம், மொழிவழி மாநிலமாக அமைத்தால் மட்டும் போதாது, அது மொழிவழி மாநிலமாக தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். மொழிவழி மக்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். அப்போதுதானே மொழிவழி மாநிலமாக தொடர்ந்து நீடிக்க முடியும். இதே இந்தியாவுக்குள் கர்நாடகத்தில் சட்டம் இயற்றுகிறார்கள், கர்நாடகத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில்  முன்னுரிமை என்று.. இதேபோல், இந்தியாவில் பல மாநிலங்களில் இயற்றி இருக்கிறார்கள், இதையெல்லாம் அண்ணாமலை கேள்வி கேட்பாரா என்ற கேள்வியை முன்வைத்தார்.

இவ்வளவு காலமும் ஒரு வளர்ச்சியற்ற சூழல், புலம் பெயர்ந்து போனால்தான் வயிற்று பிழைப்பை பார்க்க முடியும் என்கிற சூழலை ஏற்படுத்தி இருப்பது இந்த மத்திய அரசு. தமிழ்நாட்டுக்கு வேலி வேண்டும் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று 1962-ல் அண்ணா ராஜ்யசபையில் கேட்டார். தமிழ்நாட்டுக்கு என்று எப்போதிலிருந்து குடியுரிமை, எதுவரைக்கும் குடியுரிமை என்று திருத்துங்கள் என தமிழ்நாடு குடியுரிமை சட்டத்தை திருத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இரயில்வே துறையில் திட்டமிட்டு வேறொரு பெயரை காட்டி, அதற்கு அங்கீகாரம் கொடுத்து திட்டமிட்டு நுழைக்கிறார்கள். இதையெல்லாம் அரசியல் கலகமாக பாஜக பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தமிழ்தேசியவாதிகள் மக்களின் குறைகளை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் உள்ளடக்கம் நியாயமானது, ஆனால் அவர்கள் சரியான தீர்வை முன்வைக்கவில்லை என்பது வேறுசெய்தி என்று குறிப்பிட்டார்.   

வடமாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை தமிழ்தேசியவாதிகள் முன்னெடுத்து வருகிறார்கள் என்று பல்வேறுடைய கருத்துகள் எழுந்தநிலையில், தமிழ்நாட்டில் தமிழ்தேசியவாதிகள் மக்களின் குறைகளை வெளிப்படுத்துகிறார்கள் அவர்கள் உள்ளடக்கம் சரியானது, ஆனால் சரியான தீர்வை முன்வைக்கவில்லை என்று தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.