Tamil News
Tamil News
Monday, 06 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு இந்து முன்னணி பாதுகாப்பாக இருக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கிஷோர்குமார் கூறியுள்ளார். 

திருப்பூரில் வட இந்தியர்கள்

திருப்பூரில் வட இந்திய தொழிலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதனைத் தொடர்ந்து பீகார், உத்தரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட வட மாநில ஊடகங்களில், இதுகுறித்த செய்தி பரவியதால் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. மேலும் இதை அறிந்த சில வட மாநிலத் தொழிலாளர்கள் அவர்களின், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்களின் வீடியோக்களை எடுத்து, அவர்கள் உயிருக்கு பயந்து செல்வதாகவும் வதந்தி பரப்பப்பட்டது. இதனால் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு பெரும் அச்சத்திற்கும், குழப்பத்திற்கும் ஆளாயினர். 

இந்து முன்னணி விழிப்புணர்வு

இந்த நிலையில் முதலிபாளையம், சிட்கோ பகுதியில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக நேற்று (05-03-2023) மாலை இந்து முன்னணி கிழக்கு ஒன்றியம் சார்பில் மாநகர துணைத்தலைவர் பிடெக்ஸ் பாஸ்கரன் தலைமையில் சிட்கோ நுழைவாயில் முன்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த உரையில், “நாம் அனைவரும் பாரத நாட்டின் ஒரு தாய் பிள்ளைகள், மொழிவாரியாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள், காசிக்கு போவது தமிழர்கள் பண்பாடு, அதே போன்று அங்குள்ளவர்கள் ராமேஸ்வரம் வருவது பாரம்பரியமாக நடந்து வருகிறது. மொழியினால் நமக்குள் பிரிவினை ஏற்பட்டு விடக்கூடாது. பாரத தாய்க்கு அனைவரும் பிள்ளைகள் தான், இந்தியா இப்போது தான் வல்லரசாக மாறி வருகிறது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சாதிக்க வேண்டும். யாரும் பயப்பட கூடாது, சுதந்திர போராட்டக் காலத்தில் எத்தனையோ வீரர்கள் சுதந்திரத்திற்காக கஷ்டப்பட்டு போராடினார்கள். நாம் ஏன் பயந்து ஓட வேண்டும். எல்லையில் ராணுவ வீரர்கள் நமக்காக மொழி பார்க்காமல், மதம் பார்க்காமல் குளிர், வெயில் பார்க்காமல் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நினைவில் கொண்டு நாம் வாழ வேண்டும். நாம் ஏன் பயப்பட வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் திருப்பூர் மக்கள் மொழி பார்க்காமல் உதவி செய்தார்கள்.

 

சில அரசியல் கட்சிகள் சதியால் இந்தியாவை பிளவுப்படுத்த நினைக்கின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்கள் பரப்பி தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். தொழிலாளர்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். நீங்களும் நாடு முன்னேற வேலை செய்கிறீர்கள். அதேபோல் திருப்பூரில் வேலை வாய்ப்பு அதிக அளவில் உள்ளது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தேவை. எனவே சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களை போன் செய்து வரவழைத்து சந்தோசமாக வேலையை செய்யுங்கள். உங்களின் அச்சத்தை போக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என பேசினார். இந்த கூட்டத்திற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் சந்துரு, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆனந்த், ராஜகுரு, ஜெயந்து, பப்லு, ராம் சஜன், ராஜ்குமார், ராஜபாண்டி, சந்தீப் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட  கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.