Tamil News
Tamil News
Tuesday, 07 Mar 2023 11:30 am
Tamil News

Tamil News

ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமூகத்தில் அனைத்து துறைகளிலும் கால் பதித்தாலும், பெண் கல்வியை ஊக்கப்படுத்துவதற்க்கான தேவை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் பெண்கள் வளர்ச்சியில் இப்போது வரைக்கும் ஒரு தடைக்கல்லாக இருப்பது மாதவிடாய். மாதவிடாய் காலங்களில் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என பெண்களின் வளர்ச்சியும் சேர்ந்தே பாதிக்கப்படுகிறது. 

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்றார் கவிமணி. இந்த பாடலுக்கேற்ப மங்கையராய் பிறந்த ஒவ்வொருவரும் தற்போதைய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களும் இந்த சமூகத்தில் பிறப்பதற்கு நாங்கள் மாதவம் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வி ஒவ்வொருக்கும் எழும். காரணம், பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண்கல்வி, சமூகத்தில் அங்கீகாரம் போன்ற பல்வேறு காரணங்களால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் இருக்கும் கேள்வி, இப்படி புரையோடிக்கிடக்கிற சமூகத்தில் பிறப்பதற்கு மாதவம் செய்தோமா இல்லை மாபாவம் செய்தோமா என்ற கேள்வி எழுகிறது. 

இவற்றையெல்லாம் கடந்து வந்தாலும், இயற்கையும் புறம் தள்ளியது மாதவிடாய் எனும் பிணியால். சமூகம் எங்களை புறக்கணித்ததுடன், எங்களின் கல்வி, வேலை வாய்ப்பு, வளர்ச்சி போன்றவைகளிலிருந்து புறம் தள்ளியது மாதவிடாய். இவைகளையெல்லாம் கடந்து ஆண்களுக்கு நிகராக, பெண்களும் அனைத்து துறைகளிலும் கால் பதித்து இருக்கிறார்கள் என்றால் ஒரு சில நாடுகள், ஒரு சில மாநிலங்களின் மாதவிடாய் விடுப்பு என்கிற அறிவிப்பு தான்.

குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை என்ற அசத்தலான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 18 வயதுக்கு மேல் உள்ள மாணவிகளுக்கு 6 மாத கால மகப்பேறு விடுமுறை என்ற அறிவிப்பு இந்தியாவிலேயே இது தான் முதல்முறை என்ற பெருமையை பெற்றிருக்கிறது கேரளா மாநிலம். இதற்கு முன்பு கேரள பல்கலைக்கழகங்களில் 60 நாள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை 6 மாதமாக நீட்டித்திருப்பது, சமூகத்தில் பெண்கல்வியை ஊக்கப்படுத்தும் செயல் என்று பலரால் பாராட்டைப் பெற்று வருகிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரை பீகார், கேரளா மாநிலங்கள் மகப்பேறு விடுமுறை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உள்ளது. பீகாரில் 45 வயது வரை 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை கடந்த 31 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவில் மாதவிடாய் விடுமுறை என அரசாங்கத்தில் தனியாக சட்டம் ஏதும் இல்லாதநிலையில், ஒரு சில தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட 15 நிறுவனங்கள் மாதவிடாய் விடுமுறை வழங்கி வருகின்றன. ஜப்பான், இந்தோனேஷியா, தென்கொரியா, தைவான், ஜாம்பியா, வியாட்நாம் போன்ற நாடுகளில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 

வயதுக்கு வந்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுவது இயற்கை. இது இயற்கையான நிகழ்வாக இருந்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு இது மிகவும் வலி நிறைந்த நாட்களாகவே இருந்துவருகிறது. இந்தியா போன்ற நாட்டில் மாதவிடாய் குறித்த போதுமான புரிதல் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இந்நிலையில் உலகளவில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர். சமீபத்தில் ஸ்பெயினில், ஒவ்வொரு மாதமும் 3 முதல் 5 நாட்கள் பெண்கள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு மாபெரும் மாற்றத்திற்கு தொடக்கமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில், மாதவிடாய் காலத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் வயது வந்த மாணவிகள் மற்றும் பணி செய்யும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் எனக் கோரி பொது நல மனு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், மாதவிடாய் விடுப்பை கட்டாயப்படுத்தினால் முதலாளிகளும், நிறுவன உரிமையாளர்களும் பெண்களை பணிக்கு அமர்த்தமாட்டார்கள் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இந்த உச்சநீதிமன்றத்தின் கருத்து பெண்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என்ற நோக்கில் இருந்தாலும்கூட, அவற்றை மாற்றியமைக்கும் அவற்றை செயல்படுத்தும் சுதந்திரம் நீதிபதிகளுக்கு இருந்தும், அதை செயல்படுத்தாமல், அந்த கருத்தை பெண்கள் நலனுக்காக தெரிவித்ததா இல்லை முதலாளிகளின் நலனுக்காக அந்தக் கருத்தை தெரிவித்ததா என்ற கேள்வி எழுகிறது. 

மாதவிடாய் பற்றியான சிந்தனை, அவற்றைப்பற்றியான தெளிவு இன்னும் பல கிராமங்களில் வயதுக்கு வந்த பெண்களை மூடநம்பிக்கையில் மூழ்கடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் தற்போது வெளியான ‘அயலி’ என்ற தொடர் மாதவிடாய் பற்றியான விழிப்புணர்வை புரையோடிக்கிடந்த சமூகத்தை பாதி தட்டி எழுப்பி இருக்கிறது. தேசிய மகளிர் தினத்தில் பெண் சுதந்திரம், பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்கள் வளர்ச்சி என்று பேசிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் எப்படிப்பட்ட வலியை அனுபவிக்கிறாள், அந்தக் காலத்தில் அவள் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறாள், பெண் வளர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் அவளை மாதவிடாய் என்ற ஒன்றால் எப்படி நொருக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து, எதிர்கால இந்தியாவை செழுமைப்படுத்துவதற்கு மாதவிடாய் விடுப்பு மசோதாவை கொண்டு வரவேண்டும். அப்போது தொடங்கும் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிற பெண் எழுச்சி..