Tamil News
Tamil News
Sunday, 12 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

அதானி குழுமத்தின் வீழ்ச்சி

அதானி குழுமம் பங்குச் சந்தையில் எப்படி எல்லாம் மோசடி செய்தது என்பதை அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கை அம்பலப்படுத்தியது. உலகம் முழுவதும் அதானி குழும விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அதானி குழுமம் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டது. பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் மதிப்புகள் வீழ்ச்சியடைந்தன. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி கிடுகிடுவென வீழ்ச்சியை சந்தித்தார். 

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அதானி குழும மோசடியில் மத்திய அரசு எந்தவொரு முனைப்பும் காட்டாதநிலையில், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அதானிக்கும் பிரதமருக்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டினார். அதானி சொத்துக்களை குவிப்பதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் எதிராக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, உண்மை வெளிவரும் வரை  கவுதம் அதானி குறித்து தனது கட்சி தொடர்ந்து கேள்விகளை எழுப்பும் என்றும், அதானிக்கும் பிரதமருக்கும் உள்ள தொடர்பு குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்டபோது, ​​எங்களின் முழுப் பேச்சும் நீக்கப்பட்டது. அதானி குறித்து உண்மை வெளிவரும் வரை ஆயிரக்கணக்கான முறை நாடாளுமன்றத்தில் கேட்போம், நாங்கள் நிறுத்த மாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்

இந்நிலையில், இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்.எம்.பி. ஒருவர் அதானி நிறுவன கடன் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அதானி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனங்களின் கடன் விவரங்களையும் ரிசர்வ் வங்கி சட்டப்படி வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதிலளித்திருக்கிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று (மார்ச்-13) துவங்கியது. இன்றைய கூட்டத்தொடரின் போது, காங். எம்.பி. ராகுல் காந்தி லண்டனில் இந்திய ஜனநாயகம் பற்றி தவறாக பேசியதாகவும், அதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதற்கு காங். எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இந்த 2-வது அமர்வில் காங். உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி குழும விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. தீபக் பாய்ஜ், மக்களவையில், அதானி நிறுவன கடன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) சட்டப்படி, எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது' என எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருக்கிறார்.