Tamil News
Tamil News
Wednesday, 15 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் இன்று (மார்ச்-15) காலை சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் திருச்சி சிவாவின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு அரங்கம் திறப்பு

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் இன்று (மார்ச்-15) திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.பி.ஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் திரு.மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பழனியாண்டி, திரு.ஸ்டாலின் குமார், முக்கிய பிரமுகர் திரு. வைரமணி, நகர பொறியாளர் திரு. சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெயர் இடம் பெறவில்லை

அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்த நிலையில், இந்த திறப்பு விழாவுக்கான கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களிலும் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு திருச்சி சிவா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அமைச்சர் நேருவின் காரை வழிமறித்துள்ளனர். காரை மறைத்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் நிலையம் சேதம்

இந்த சம்பவத்திற்கு பதிலடியாக அமைச்சர் நேரு ஆதரவாளர்களாக கூறப்படும் சிலர் திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தற்பொழுது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்களை திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போது, அங்கு வந்த நேரு ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.