Tamil News
Tamil News
Tuesday, 14 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

கடந்த அதிமுக ஆட்சியின்போது 2018-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டம். சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டுவரப்பட இருந்த இந்த திட்டத்துக்காக, 7 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கொதிப்படைந்த விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். 

திமுக எதிர்ப்பு

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. விவசாயம், சுற்றுச்சூழல், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் அதிவேகமாக நாசமாக்கிவிட வேண்டும் என்று அதிமுக அரசும் மத்திய அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருப்பது, அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான மாபதகச் செயல். மக்களின் நலன்களைக் காவு கொடுத்து, சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தி, விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து, சேலம் எட்டுவழிப் பசுமைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட்டு, அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்து அறிக்கை விட்டார் மு.க. ஸ்டாலின். 

பின்னர், மு.க. ஸ்டாலின் முதல்வரான பிறகு முதல்முறையாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாடு சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அந்த கோரிக்கைகளில் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் இடம் பெற்றிருந்தது. 

திமுக எதிர்க்கவில்லை

இந்த விவகாரத்தில் பொதுத்துறை அமைச்சராக பதவியேற்ற எ.வ.வேலு. எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு திமுக எதிரி அல்ல என்று பேசியிருந்தார். சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை போடக்கூடாது என்று எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை என்றும், திமுக சாலை போடுவதற்கு எதிரி அல்ல என்றும் செய்தியாளர்களிடம் பேசியது பேசுபொருளை உருவாக்கியது. 

மத்திய அரசு விளக்கம்

இந்தநிலையில், இன்று (மார்ச்-15) மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் எட்டு வழிச்சாலை திட்டம் பற்றி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார். எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு எந்த விண்ணப்பமும் வரவில்லை என்றும் சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவில்லை என்றும் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஒருபுறம் எட்டு வழிச்சாலையை எதிர்க்கிறோம் என்றும், இன்னொரு புறம் சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை போடக்கூடாது என்று எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை என்றும் பேசியிருந்தநிலையில், தற்போது எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு எந்த விண்ணப்பமும் வரவில்லையென்றும், இத்திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவில்லை என்றும் பதில் அளித்திருப்பது, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.